கர்நாடக மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது .வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தங்களது வேட்புமனுக்களைக் கடந்த 13-ந் தேதி தாக்கல் செய்யத் தொடங்கி , கடந்த 20-ந் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்து முடித்தனர் . 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் கர்நாடக மாநில தேர்தல் துறையால் வெளியிடப்பட்டது .
தனிப் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் 224 தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்ற சூழ்நிலையில் , பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக தனது வேட்பாளர்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டது .

இதேபோல் ஓபிஎஸ் அணியினருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததால் , அவர்களும் தங்களது வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்று அறிவித்தனர் .
இந்த நிலையில் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்த குமார் சட்ட விரோதமாக அதிமுக பெயரை பயன்படுத்தியதாக, தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு புகார் அளித்தது .
இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்குத் தவறான தகவல் அளித்ததாக IPC 1860 உட்பிரிவு 171G-ன் கீழ் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த குமார் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த சம்பவம் காந்திநகர் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .