கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம், அதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ நாகை மாலி, “திமுக தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத்தொகை என வாக்குறுதி அளித்தபடி 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தகுதியானவர்கள் பலருக்கும் கூட மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை.” என்றார்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், “தகுதியான ஏழைப் பெண்களுக்கான உன்னதமான திட்டம் இது.இருந்தாலும் இந்த திட்டத்தால் பெரும்பாலான குடும்பங்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளும். ஆனாலும் பல லட்சக்கணக்கான பெண்களுக்கு இந்த திட்டம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்களுக்கு கொடுத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்” என தெரிவித்தார்
அதிமுகவினர் ஒட்டு மொத்தமாக சட்டசபையை விட்டு வெளிய்ந்ந்றினாலும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மட்டும் அவையில் இருந்தார்.அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார், “ஒரு கையில் குழந்தையையும், ஒரு கையில் செல்போனையும் வைத்துக்கொண்டு அரசு அலுவலகங்களில் பெண்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். வருமான உச்ச வரம்பு, கார் வைத்திருப்பது என நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்கள், விளிம்பு நிலை மக்கள் அனைவருக்கும் வழங்குவதாக தெரிவித்தார் முதலமைச்சர்.

ஆனால் வசதி படைத்தவர்கள் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மேல் முறையீடு செய்யலாம் என்று சொல்லி இருக்கிறார். மீண்டும் மேல் முறையீடு செய்ய முன்வரும் மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் பதில்: மகளிர் உரிமைத் திட்டத்தின் மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அக்கறையுடன் கவன ஈர்ப்பை கொண்டு வந்துள்ளனர்.
பெண்கள் ஒவ்வொருவரும் முதலமைச்சரை கொண்டாடி வருகிறார்கள். 1.62 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முழுக்க முழுக்க தகுதி வாய்ந்த 1.06 கோடி மகளிர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெண்கள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் யார் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் ? என தீர்மானிக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே வகைப்படுத்தப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள், குடும்பத் தலைவிகள், முதியோர் உதவித்தொகை பெறுவோரும் பயன்பெறும் வகையில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டன.
எந்த ஒரு தகுதியான பயனாளிக்கும் வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்காத பயனாளிகள் புதிதாக விண்ணப்பிக்க அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள் மேல்முறையீடு செய்யலாம். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்’ விதிகளை பூர்த்தி செய்கிற அத்தனை மகளிருக்கும் உரிமைத் தொகை பெற்றுத் தருவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் கடமை – பொறுப்பு – உரிமை. ” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.