தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்க இருக்கிறது/கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை போதிய அளவு இல்லை என்கின்றனர் விவசாயிகள்.அப்படியே பெய்த மழை நீரையும் சேமிக்க முடியாத சூழலே இருந்தது.பெரும்பாலான நீர் நிலைகள் தூர் வாரப்படாததே இதற்கு காரணம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் இருந்து தென்மேற்கு பருவமழை இன்றுடன் விலகி விட்டதாக கூறினார்.
மேலும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், இயல்பையொட்டியே மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழகம், புதுச்சேரியில் ஒரு வாரத்துக்கு மிதமான மழை பெய்யும் என்றும், வங்கக்கடலில் 21ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் அவர் கூறினார். சூறாவளிக்காற்று வீசும் என்பதால் வங்கக்கடல், அரபிக்கடலுக்கு 23ஆம் தேதி வரை மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழகத்தில் பதிவான தென் மேற்கு பருவமழையின் அளவு 354 மி.மி. இது இயல்பைவிட 8% அதிகம். சென்னையில் பதிவான மழையின் அளவு 779 மி.மி. இது இயல்பைவிட 74% விட அதிகம்.
வட கிழக்கு பருவமழை தமிழகம், கேரளா, தெற்கு கர்னாடகா, தெற்கு ஆந்திரா, ராயலசீமா உள்ளிட்ட 5 பகுதிகளில் இயல்பை ஒட்டி இருக்கும். தமிழகத்திலும் இயல்பை ஒட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். தென் இந்திய பகுதிகளில் வட கிழக்கு பருவமழையின் இயல்பு அளவு 33 செ.மீ.. இந்த ஆண்டு 29 செ.மீ. முதல் 37 செ.மீ. வரை எதிர்பார்க்கலாம்” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசு வட கிழக்கு பருவமையின் போது ஏற்படும் இடர்களை போக்கும் விதமாக முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.