நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் (என்எல்சி) விரிவாக்க நடவடிக்கைகளுக்காக பத்தாண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்திய நிலங்களில் விவசாயிகள் தாங்கள் பயிரிட்டுள்ள பயிர்களை அறுவடை செய்ய செப்டம்பர் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கத் தயாராக இருப்பதாக மாநில அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், விவசாயிகள் பிரச்னையை உருவாக்காமல் தடைக்காலத்துக்குப் பிறகு நிலங்களை ஒப்படைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு முன்வைத்துள்ளது .
முன்னதாக ,கையகப்படுத்திய நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள்?’ என என்எல்சி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிதம்பரம் அருகே வளையமாதேவியில் மேல் பரவனாறு கால்வாயில் சுரங்கங்கள் மற்றும் அதை ஒட்டிய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுக்கும் வகையில் மண் அள்ளும் இயந்திரங்களைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்கத் தயாராக இருப்பதாக என்எல்சி நீதிமன்றத்தில் உறுதியளித்தது. பருவமழை காலத்தில் , இழப்பீடு தொகை கடலூர் கலெக்டரிடம் டெபாசிட் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிர்வாகம் இரண்டு சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை 2007-ம் ஆண்டு கையகப்படுத்தியது.வாய்க்கால் வெட்டும் பணியின் போது பயிர்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்புகள் வலுத்த நிலையில், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் அறுவடை செய்யப்படும் வரை விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு அவசர வழக்காக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலு, 2011ல் நிலத்தை கையகப்படுத்தியும் இதுவரை அந்த நிலங்களில் எந்த விரிவாக்க பணிகளும் நடத்தப்படவில்லை , விவசாயம் நடைபெற்று பயிர் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் , கால்வாய் அமைக்கப்படுகிறது. அறுவடை காலம் முடியும் வரை விவசாயிகளுக்கு NLC நிர்வாகம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
மேலும் நீதிமன்றம் NLC நிர்வாகத்தால் அமைக்கப்படும் கால்வாய் பணிகளை தடுக்க வேண்டும். பயன்படுத்தாத நிலத்தை பிரிவு 101ன் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமே திருப்பித் தரும் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார் .
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன்,ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 25 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இழப்பீடு பெற்றபின் அந்த நிலம் அரசுக்கு சொந்தமாகி விடுகிறது என்பதால் அதில் தொடர்ந்து நீடிப்பது அத்துமீறல் என வாதிட்டார்.
ஒரு பகுதியில் நிலத்தை எடுக்க ஒப்புதலும், மற்றொரு பகுதியில் வழக்கும் என மனுதாரர் இரட்டை நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியதுடன், அரசியல் கட்சியினர் அங்கு சென்று விவசாயிகள் மூலமாக பிரச்சினையை தூண்டுகின்றனர். இவர்கள் அங்கு செல்வதை நிறுத்தினாலே எல்லாம் சுமூகமாக முடிந்துவிடும் என வாதிட்டார். மின் தேவையை ஈடுகட்ட போதுமான நிலக்கரி இல்லாததால் கையகப்படுத்திய நிலத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் நிலத்தை சுவாதீனம் எடுக்க ஒப்புதல் தெரிவித்து விட்டு இப்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
இதைத்தொடர்ந்து என்எல்சி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அறுவடை செய்த பின், 2023 ஜனவரியில் நிலம் சுவாதீனம் எடுக்கப்படும் என 2022ம் ஆண்டு டிசம்பர் மாதமே அறிவிக்கப்பட்டது. இந்த கால்வாய் அமைக்காவிட்டால், பருவமழை காலத்தில் சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்து பெருத்த சேதம் ஏற்படும்.மேலும், சேதமான பயிருக்கு நிர்வாகம் இழப்பீடு வழங்க தயாராக உள்ளது. பழைய நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே கையகப்படுத்திய நிலத்துக்கு புதிய சட்டம் பொருந்தாது. பயன்படுத்தாத நிலத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என கோர முடியாது” என்று வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “எந்த கட்சியும் அரசியல் செய்வதை தடுக்க முடியாது , அரசியல் செய்வது அவர்களின் உரிமை என்று கூறியுள்ளார், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மாநில அரசின் கடமை.
அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைத்து விடுவீர்களா?” என மனுதாரர் தரப்புக்கும், “கையகப்படுத்திய பின் நிலத்தில் சாகுபடி செய்ய ஏன் அனுமதித்தீர்கள்?” என என்எல்சி தரப்புக்கும் கேள்வி எழுப்பினார்.பின்னர், கையகப்படுத்திய நிலத்தில் வேலி அமைத்திருக்க வேண்டும் அல்லது ஆட்களை நியமித்து கண்காணித்திருக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்குபிழப்பீடு வழங்குவது குறித்து பிரமாணப்பத்திர மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கும், என்எல்சி தரப்புக்கும் உத்தரவிட்டார்.
மேலும், கால்வாய் தோண்டும் பணியை தொடரலாம். அறுவடைக்கு பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.