ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் ஆன்லைனில் விளையாடும் ரம்மி மற்றும் போக்கர் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்தும், அதை ஒழுங்குபடுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி நிறைவேற்றியது.
இந்த சட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல மாதங்களாக ஒப்புதல் அளிக்காமல் வைத்திருந்த அந்த சட்ட மசோதாவை கடந்த மார்ச் 6ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு கவர்னர் திருப்பி அனுப்பினார். இதனையடுத்து கடந்த மார்ச் 23ஆம் தேதி சட்டசபை கூட்டப்பட்டது. சூதாட்ட சட்ட மசோதாவை நிறைவேற்றி அடுத்த நாளே கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.

இந்த சட்டம் அரசு இதழில் வெளியிடப்பட்டு, அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கூடிய ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களில் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான டெல்லி மூத்த வழக்குகள் முகுல்ரோத்தகி, சி.ஆர். யமா சுந்தரம், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அவர்களது வாதத்தில் ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து, சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை திறமைக்கான விளையாட்டு என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அதன் பிறகும் இந்த விளையாட்டை அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டாக கருத முடியாது. எனவே தமிழ்நாடு அரசின் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டனர். தமிழ்நாடு அரசு தரப்பில் டெல்லி மூத்த வக்கீல் கபில் சிபல், அட்வகேட் ஜெனரல் ஆர். சண்முகசுந்தரம் மாநில அரசு பிளிடர் பி. முத்துக்குமார் ஆகியோர் ஆஜராகி, ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் அப்பாவி பொதுமக்கள் பலர் தங்களது பணத்தையும், உயிரையும் இழந்துள்ளனர்.

ஆன்லைன் சூதாட்டம் மூலமாக பொதுமக்கள் ஏமாறுவதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு சட்டம் இயற்ற அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டனர். அனைவரது வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பே தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து, கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிற்பகலில் பிறப்பித்தனர். அதில் கூறிருப்பதாவது, தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், என்ற மனுதாரர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது.
அதிர்ஷ்டத்திற்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டம் செல்லும். அதே நேரம் திறமைக்கான விளையாட்டுகளான ரம்மி, போக்கர் ஆகிய விளையாட்டுகளை அதிர்ஷ்டத்திற்கான விளையாட்டு எனக் கூறி தடைவிதித்து தமிழ்நாடு அரசு ஏற்றிய சட்டப் பிரிவுகள் செல்லாது. அந்த சட்டப்பிரிவிலே ரத்து செய்கிறோம். ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.