நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு தி.மு.க உறுதுணை – ஓபி எஸ் கடும் கண்டனம்!

0
28
ஓ பி எஸ்

விவசாய விளை நிலங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் தி.மு.க. அரசிற்கும் கடும் கண்டனம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தன்னுடைய சுரங்கத் திட்டத்திற்காக சிதம்பரம் அருகில் வளையமாதேவியில் அமைந்துள்ள 1.8 கிலோ மீட்டர் நீளமுள்ள மேல் பரவனார் வாய்க்காலை மாற்றி விடுவதற்காக கையகப்படுத்திய விளை நிலங்களை தன்வசப்படுத்துவதற்கான பணியில் நேற்று முன் தினம் முதல் ஈடுபட்டு வருவதாகவும், பலத்த காவல் துறை பாதுகாப்புடன், 30-க்கும் மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு அறுவடைக்கு தயராயிருந்த பயிர்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. மேற்படி விளை நிலங்களுக்கு தரவேண்டிய இழப்பீட்டினை தராத நிலையில், அறுவடைக்கு, தயாராயிருந்த பயிர்களை மண் அள்ளும் இயந்திரங்களை வைத்து அழித்தது.

இயற்கை நியதிக்கு முரணான செயல். இது அப்பகுதி விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தி.மு.க. அரசின் துணையோடு விளை நிலங்களை அழிக்கும் பணியில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் ஈடுபட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும், இதன் காரணமாக ஆயிரக்கணக்கான காவல் துறையினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாகவும், போராட்டம் செய்யும் விவசாயிகளை, எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளை காவல் துறையினர் துரத்தி அடிப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. விவசாயிகள் மீதான இந்தத் தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது.

என் எல் சி

இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் பயிர்கள் விதைக்காமல் இருக்க விவசாயிகள் ஒத்துக் கொண்டதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்திருப்பதும் ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. இதிலிருந்தே தி.மு.க. அரசு எந்த அளவுக்கு விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை விவசாயப் பெருங்குடி மக்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள்.

ஆட்சியில் இல்லாதபோது, வேளாண் உற்பத்தியைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும் வேளாண்மைக்கென்று தனியாக நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வேளாண் பணிகள் மேம்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு விளை நிலங்களை அழிக்கும் முயற்சிக்கு துணை போவது வெட்கக்கேடானது. இதுதான் வேளாண் பணிகளை மேம்படுத்தும் செயலா? வேளாண்மைக்கென்று தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்து என்ன பயன்? இந்த விவசாய விரோத, ஜனநாயக விரோத தி.மு.க. ஆட்சிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளை நிலங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தினை அங்கிருந்து முதலில் அப்புறப்படுத்தி, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கைகளுக்கு செவி மடுக்கவும், விளை நிலங்கள் அழிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அதற்கான இழப்பீட்டினை வழங்கவும் மாண்புமிகு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here