சென்னை: பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து மேல்முறையீட்டு வழக்கை எடுத்துக் கொண்டிருப்பது பொன்முடியை மட்டுமல்ல திமுக தரப்பையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர். சமீபத்தில் இரண்டு முக்கிய வழக்குகளில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு வழக்கில் சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 1996 – 2001 காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். இந்த காலகட்டத்தில் அவர் முறைகேடாக நிலம் வாங்கியதாக கூறப்பட்டது.
தன்னுடைய மாமியார் சரஸ்வதி பெயரில் போலி ஆவணங்களைத் தயார் செய்து நிலம் வாங்கியதாக கூறப்பட்டது. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு
காலனி பகுதியில், அரசுக்குச் சொந்த 3,630 சதுர அடி நிலத்தைப் பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் சமீபத்தில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பொன்முடி விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கடந்த 13-5-1996 முதல் 31-3-2002 வரையிலான கால கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்டவில்லை என்று பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
இதில் 172 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி வேலூர் கோர்ட் நீதிபதி வசந்த லீலா பிறப்பித்த உத்தரவில், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததாலும், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
மீண்டும் விசாரணை:
திமுக அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அதிரடி ரெய்டுகளை நடத்தி வருவதால், பொன்முடியை போல அதிமுக ஆட்சியில் போடப்பட்ட தங்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடித்து விடுதலை ஆக வேண்டும் என வேகவேகமாக இயங்கி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில்
பொன்முடி விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் முறையாக கையாளவில்லை என்றும், மேல் முறையீடு செய்ய ஆர்வம் காட்டவில்லை என்றும் கருதியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதனால் சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டை சூ-மோட்டாவாக எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்கவிருக்கிறார். இன்று மதியம் இந்த வழக்கின் விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
திமுக கவனம்:
பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றமே தாமாக முன்வந்து மேல்முறையீட்டு வழக்கை எடுத்துக் கொண்டிருப்பது பொன்முடியை மட்டிமல்ல திமுக தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், நில அபகரிப்பு வழக்கில் பொன்முடி விடுதலை செய்யப்பட்டிருப்பதால் அந்த வழக்கிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக இயங்கவில்லை என கூறி அதிலும் சூ-மோட்டாவாக வழக்கு பதிவு செய்யப்படலாம் என்ற அச்சமும் திமுக வழக்கறிஞர்களிடம் இருக்கிறது. இப்படி சூ-மோட்டாவாக உயர்நீதிமன்றம் வழக்கினை பதிவு செய்வதால், பொன்முடி பாணியில் வழக்கிலிருந்து விடுதலையாகலாம் என திட்டமிட்டு காய்களை நகர்த்தி வந்த திமுக அமைச்சர்களுக்கு கிலி ஏற்பட்டிருக்கிறது. சூ-மோட்டா என புது ரூட்டில் உயர்நீதிமன்றம் வழக்கை பதிவு செய்திருப்பது பொன்முடிக்கு சிக்கல் தான்.