தென்கிழக்கு வங்கக் கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்பதால் வட தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேக மாறுபாடு மாறிய நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு காற்றழுத்தம் உருவானது. அது மேற்கு – வட மேற்கு திசையில் நகரத் தொடங்கியதால் நேற்று முன்தினம் கடலோர மாவட்டங்களை உள்ளடங்கிய 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

குறிப்பாக நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. அதில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 170 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியை அடுத்து நாகப்பட்டினம் 150 மி.மீ, காரைக்கால் 140 மி.மீ, நன்னிலம் கடலூர், பரங்கிப்பேட்டை ,புதுச்சேரி 120 மி.மீ, வேதாரண்யம், திருப்பூண்டி 110 மி.மீ, கோடியங்கரை, சிதம்பரம் தலைஞாயிறு, மயிலாடுதுறை, கே.எம் கோவில், மதுராந்தகம் 100 மி.மீ, சீர்காழி, தரங்கம்பாடி, வானமாதேவி திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் 90 மி.மீ, கேளம்பாக்கம் 80 மி.மீ, வானூர், முண்டியம்பாக்கம் 70 மி.மீ, திண்டிவனம், சென்னை, சத்யபாமா பல்கலைக்கழகம் 50 மி.மீ மழை பெய்துள்ளது.
சென்னையில் ஆலந்தூர், சென்னை விமான நிலையம், சோழிங்கநல்லூர், தாம்பரம், அம்பத்தூர், பெருங்குடி கோடம்பாக்கம், எம் ஜி ஆர் நகர், எண்ணூர், தரமணி, அடையாறு, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் 50 மி.மீ முதல் 30 மி.மீ வரை மழை பெய்துள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவில் மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர கடலோர பகுதிகளில் ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

பின்னர் அது 17ஆம் தேதி கொல்கத்தாவில் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வங்க கடலில் நிலை கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் 17ஆம் தேதி வரை கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோர பகுதிகள் மன்னார் வளைகுடா பகுதிகள் குமரி கடல் மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும் என்றும், மத்திய மேற்கு வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வட ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதியில் ஆகிய இடங்களிலும் சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மழை காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.