திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலை (ஸ்ரீ சரவணா ஊதுவத்தி தொழிற்சாலை ) இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையை உமாமகேஸ்வரன் என்பவர் நடத்திவருகிறார் .இந்த நிலையில் நேற்று இரவு 9 :30 மணியளவில் தொழிற்சாலையின் உள்பகுதியில் இருந்து திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. பின்னர், அடுத்த சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதற்குள் தீ தொழிற்சாலையில் பல்வேறு பகுதிகளுக்கு பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பின்பு கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிய தொடங்கியதால் வாணியம்பாடி , நாட்றாம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் பகுதியிலிருந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வாகனங்களில் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர்.
ஆனாலும் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் தொழிற்சாலையில் இருந்த பல கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப் பாண்டியன் ,காவல் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் வருவாய் அதிகாரிகள் நேரில் பார்வை இட்டு விசாரணை நடத்தினர் .
இந்த தீவிபத்து குறித்து அம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிற்சாலையில் இருந்த ஜெனரேட்டர் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்த நிலையில் . இந்த விபத்து விண்கற்கள் விழுந்து ஏற்பட்டுஇருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர் .
சமத்துவ இடத்தில தடயவியல் நிபுணர் பாபு தலைமையில் அதிகாரிகள் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இதற்கிடையில் தீ விபத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக ஊதுவத்தி தொழிற்சாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .