ரஜினிகாந்த் வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஓ.பன்னீர்செல்வம், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நவராத்திரி பண்டிகையில் வீடுகளில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையின்போது நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கொலு வைத்து வழிபடுவார்கள். அந்தவகையில் நவராத்திரியின் கடைசிநாளான நேற்றுமுன்தினம், சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்த சிறப்பு பூஜையை ரஜினிகாந்தின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா ஆகியோர் நடத்தினர். புதிய படப்பிடிப்பு பணிகளுக்காக ரஜினிகாந்த் மும்பையில் இருப்பதால், அவரால் இந்த சிறப்பு பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை.
லதா ரஜினிகாந்த் அழைப்பை ஏற்று, இந்த சிறப்பு வழிபாட்டில் முக்கிய பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அதேபோல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், சகோதரி செல்வி ஆகியோரும் இந்த பூஜையில் கலந்துகொண்டனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் நவராத்திரி பூஜையில் பங்கேற்றார். பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மேலும் நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா, நடிகை மீனா,பழம்பெரும் நடிகை லதா உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்களும் இந்த பூஜையில் பங்கேற்றனர்.
நவராத்திரி பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் லதா ரஜினிகாந்த் பிரசாதமும், சிறப்பு பரிசும் வழங்கினார். ரஜினிகாந்த் வீட்டுக்கு சினிமா நட்சத்திரங்களும்,முக்கிய பிரபலங்களும் ஒரே நேரத்தில் வந்ததால் போயஸ்கார்டன் பகுதி பரபரப்பாக காணப்பட்டது.இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.