தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியதால் ராஜினாமா முடிவை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
1999 இல் காங்கிரஸிலிருந்து விலகிய சரத் பவார் மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் என்கிற கட்சியை துவங்கினார். கடந்த 24 ஆண்டுகளாக கட்சி தலைவராக அவர் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அந்த பதவியை ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். இதனால் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அடுத்த தலைவர் யார் என்பதை கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
சரத் பவாரின் இந்த திடீர் அறிவிப்பு அந்த கட்சியை மட்டும் அல்லாமல் மற்ற கட்சிகளை சார்ந்தவர்களுக்கும் ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகள் சுப்ரியா சுலே, அவரது சகோதரர் மகன் அஜித் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சரத்பவாரின் ராஜினாமா நிராகரிக்கப்படுவதாகவும் கட்சித் தலைவராக அவரைத் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை மட்டும் அல்லாமல் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோ அவர் மீண்டும் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரான பிரபுல் படேல் செய்தியாளர்களை சந்தித்தார்.
உயர்நிலைக் குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக சரத் பவார் தொடர வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து தலைவர் பதவியை அவர் மீண்டும் ஏற்க வேண்டும். என்று தீர்மானித்திருப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் கோரிக்கையை ஏற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை திரும்பப் பெறுவதாக சரத் பவார் அறிவித்தார். இந்த அறிவிப்பு அந்த கட்சியின் தொண்டர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.