என்னை மூன்றாம் பாலினத்தவரை போல் அணுகாமல் சராசரி மாணவியாக என்னை அணுகியதால்தான் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது என்று , +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை மாணவி ஸ்ரேயா தெரிவித்துள்ளார் .
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. இந்த வருடம் தேர்வு எழுத 8,36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத் திறனாளி மாணவர்கள் , 6 மூன்றாம் பாலினத்தவர், 90 சிறை கைதிகள் உட்பட மொத்தம் 8.65 லட்சம் பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். ஆனால் தமிழகம் முழுவதும் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8.03 லட்சம் மாணவர்களில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவிகள் 96.38% (4,05,753), மாணவர்கள் 91.45% (3,49,697) பேர் அடங்குவர்.

12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான இன்று நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை மாணவி ஸ்ரேயா 12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் தமிழ் மொழிப் பாடத்தில் 62, ஆங்கிலத்தில் 56, பொருளியல் பாடத்தில் 48, வணிகவியல் பாடத்தில் 54, கணக்குப்பதிவியல் பாடத்தில் 58, கணினி பயன்பாடுபாடத்தில் 59 என மொத்தம் 337 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
இந்த வருட பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்யப்பட்ட 6 மூன்றாம் பாலினத்தவரில் ஸ்ரேயா ஒருவர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இவரை குறித்த கூடுதல் விவரங்கள் பின்வருமாறு :
ஆவராங்காடு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரியின் மகள் ஸ்ரேயா , இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்து வருகிறார் இந்த பள்ளியில் ஸ்ரேயா உட்பட 378 மாணவிகள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் 356 பேர் தேர்ச்சி அடைந்தனர் .

மேலும் அவரது இந்த வெற்றி குறித்து பேசியபோது ” நான் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆண்டுகள் படித்தேன். நான் படிக்கும் காலத்தில் சக மாணவிகளோ , பள்ளி ஆசிரியர்களோ என்னை திருநங்கை போல நடத்தவில்லை , ஒரு சராசரி மாணவியாக மட்டுமே என்னிடம் பழகினார்கள் .இதுவே நான் படிப்பில் ஆர்வம் செலுத்த பெரிதும் தூண்டுதலாக இருந்தது . என்னுடைய பள்ளி தலைமை ஆசிரியரும், என்னுடைய வகுப்பு ஆசிரியர்களும், என்னுடைய பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களும் தான் என்னுடைய இந்த வெற்றிக்கு காரணம்.
இந்த வெற்றியை எனது ஒட்டுமொத்த திருநங்கை சமூகத்திற்கே கிடைத்த வெற்றியாக தான் நான் பார்க்கிறேன் . திருநங்கைகள் அனைவரும் கல்வி கற்று சமுதாயத்தில் உயர் பதவிகளில் இருக்க வேண்டும். நான் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். எனது உயர்கல்விக்கு அரசு உதவினால் மிகவும் நன்றியுள்ளவராக இருப்பேன் ” என ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.