விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ படத்திற்கு சீமான் வாழ்த்து !

3 Min Read
விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ படத்திற்கு சீமான் வாழ்த்து !

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ தமிழரின் வலியை சுமந்த திரைக்காவியம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்,”சந்திரா ஆர்ட்ஸ் நிறுவன தயாரிப்பில் தம்பி விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ திரைப்படம் பார்த்தேன். தமிழினம் நீண்ட காலமாகத் தூக்கிச் சுமந்து கொண்டிருக்கும் வலியை மிகுந்த கவனத்தோடும், பொறுப்புணர்வோடும் திரைமொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது.

தமிழீழ தாயக மக்கள் இன்றளவும் தாங்கி நிற்கும் ஆற்றாமையை உணர்த்தும் நோக்கில் இயக்குநர் வேங்கட கிருஷ்ணா இத்திரைப்படத்தை எடுத்துள்ளது போற்றுதலுக்குரியது.

ஈழச்சொந்தங்களின் வலியை உணர்ந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் நெகிழ்ச்சியான பல காட்சிகள் என்னை கண் கலங்க வைத்துவிட்டது. அந்த அளவிற்கு இத்திரைப்படம் மிகவும் உணர்வுப்பூர்வமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதை வெறும் படமாக மட்டும் கடந்து போக முடியாது. ஈழத்தமிழர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு பொதுவாக்கெடுப்பு தான் தீர்வு என்று சொல்லும் இத்திரைப்படம் அண்மைக்காலங்களில் ஈழத்தை குறித்தான மிகப்பெரிய மிகச்சரியான பதிவு.

இந்த நாட்டிற்கும் ஒரு தொடர்புமில்லாத திபெத்தியர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்குகிறது. வணிக வளாகங்கள், திரையரங்குகள், கல்லூரிகள், விளையாட்டுத்திடல்கள் என அனைத்து வசதிகளும் செய்துகொடுத்து அவர்களை வசதியாக வாழ வைக்கிறது. ஆனால், இந்தியாவைத் தங்கள் தந்தையர் நாடெனக் கருதி வாழும் ஈழச்சொந்தங்கள் கடந்த 35 ஆண்டிற்கும் மேலாக ஒரு தலைமுறை தாண்டி தமிழ்நாட்டில் வாழ்ந்தபோதும் அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் என்று கூறி இன்றுவரை குடியுரிமை வழங்க மறுத்து வருகிறது.

பத்து கோடி தமிழர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தபோதும், எங்கள் தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழர்களை அகதிகளாகவே நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு அடிமைகள்போல நடத்தப்படுகின்ற அத்துயரம் தோய்ந்த அக்கொடுமைகளை இத்திரைப்படம் உருக்கமான காட்சிகள் மூலம் படத்தைக் காணும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் கடத்துகிறது. சிறப்பு முகாம் என்ற சித்திரவதை முகாம்களில் நடைபெறும் கொடுமைகளையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது இத்திரைப்படம்.

கதையின் நாயகனாக தம்முடைய மிக இயல்பான நடிப்பினால் ஏற்றப் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்துள்ள தம்பி விஜய் சேதுபதியின் பங்களிப்பு அசாத்தியமானது. இளம் வயதில் இத்தகைய உணர்வுப்பூர்வமான திரைப்படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று எண்ணியதற்கே தம்பி இசக்கிதுரை அவர்களுக்கு எனது அன்பும், பாராட்டுகளும். திரைப்படத்தை எழுதி, இயக்கிய தம்பி வேங்கட கிருஷ்ணா ரோகாந்த் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.

மிகவும் உணர்வுப்பூர்வமாக நடித்துத் திரைப்படத்தின் வெற்றிக்குத் துணைநின்ற மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றென்றும் நிறைந்திருக்கும் சின்னக் கலைவாணர் விவேக், சின்னி ஜெயந்த், அண்ணன் பவா செல்லதுரை, தம்பி கரு.பழனியப்பன், இயக்குநர் மகிழ் திருமேனி, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் எனது அன்பு நிறைந்த வாழ்த்துகள்.

மிகச் சிறப்பாக இசையமைத்த தம்பி நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவு செய்த தம்பி வெற்றி வேல் மகேந்திரன், படத்தொகுப்பு செய்த தம்பி ஜான் அப்ரகாம், கலை இயக்குநர் கே. வீரசமர், படைப்புருவாக்கம் செய்த ரகு ஆதித்யா மற்றும் திரைப்படத்தில் பங்கெடுத்த அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழினத்தின் நீண்டகால துயரத்தினை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை தமிழ் மக்கள் திரையரங்குகளில் சென்று பார்த்து, இத்திரைப்படத்தினைப் பெருவெற்றிப் பெறச்செய்ய வேண்டும்.

இதுபோன்ற திரைப்படங்களை வரவேற்று, ஆதரித்து, வெல்ல வைப்பதன் மூலம் தமிழர் உணர்வையும், உரிமையையும் உரக்கப் பேசும் திரைப்படங்கள் மேன்மேலும் வெளிவர ஊக்கமளிக்க வேண்டுமெனவும் உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a review