எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவளிக்கும் என்று சீமான் அறிவித்துள்ளார்.கோவையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக இந்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அக்டோபர் மாதம் இறுதி வரை மாநிலம் முழுவதும் இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தான் நாம் தமிழர் கட்சியின் கொள்கை மக்களின் எதிர்பார்ப்பும் அதுதான். அதனால் தான் தனித்து போட்டியிடுகிறோம்.
எதிர்வரும் தேர்தலில் அண்ணாமலை 30 சதவீதம் ஓட்டு பெறுவோம் என்று கூறுகிறார். அப்படியானால் அவர் ஏன் கூட்டணி வைத்துள்ளார். நான் வெறுப்பு அரசியல் நடத்தவில்லை அண்ணாமலை தான் இது போன்ற அரசியலில் நடத்துகிறார். தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் தராத காங்கிரசுக்கு திமுக ஆதரவளிக்கிறது. முதலில் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரி தண்ணீர் வாங்கி தர வேண்டும் திமுக அதிமுகவுடன் எனக்கு நடப்பது பங்காளி சண்டை அண்ணன் தம்பி சண்டை தான். ஆனால் இதில் பாஜக எதற்கு தலையிடுகிறது.
பாஜக இந்தியா நாட்டை ஏழை நாடாக ஆக்கிவிட்டது.ராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து நேரடியாக திமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் நான் விலகிக் கொள்கிறேன் திமுகவுக்கு ஆதரவு தருகிறேன். மோடியை எதிர்த்து திமுக போட்டியிடாவிட்டால் நானே நேரடியாக களம் காண்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமில்லாத ஒன்று ஒரே நாடு என்கிறார்களே காவிரியில் இருந்து முதலில் தமிழ்நாட்டுக்கு பாரதிய ஜனதா அரசு தண்ணீர் கொண்டு வரட்டும். தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் என் கொள்கை சாதி மத உணர்வு சாகும்போது தமிழினம் தானாக வளரும்.
நடிகை விஜயலட்சுமி கடந்த 2013 ஆம் ஆண்டு என் மீது புகார் அளித்தார். அதன் பின்னர் அவர் எங்கே போனார் மீண்டும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது புகார் தெரிவித்தார். தற்போது 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்துகிறார். எனக்கும் விஜயலட்சுமிக்கு திருமணமாகி இருந்தால் அதற்கான போட்டோவை வெளியிட வேண்டும். பல லட்சம் பேர் என்னோடு போட்டோ எடுத்திருக்கிறார்கள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பெண்ணை வைத்து என் மீது அவதூறு பரப்புகிறார்கள். நான் எதற்கும் பயப்பட மாட்டேன் என்று அவர் தெரிவித்தார்.