திருச்சியில் வாலிபர் சங்கத் தலைவர் மீது கொலைவெறித் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்,”இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருச்சி மாநகர் மாவட்டம், அரியமங்களம், அம்மா குளம் கிளைச் செயலாளர் தோழர் தவ்பிக்கை அதே பகுதியைச் சேர்ந்த சமூக விரோத செயல்களிலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையிலும், செயின் பறிப்பு, இரண்டு சக்கர வாகன திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்ற பாஜக கட்சியைச் சார்ந்த வினோத் மற்றும் அவனது கூட்டாளிகள் பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யும் நோக்கோடு அவரை வெட்டியுள்ளனர். தலையிலும், உடலிலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தவ்பிக் சிகிச்சைப் பெற்று வருகிறார். சமூக விரோதக் கும்பலின் இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தோழர் தவ்பிக் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு ரத்த தானம் உள்ளிட்டு மக்கள் சேவை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். இதே பகுதியில் பாஜக கட்சியைச் சேர்ந்தவரும், கஞ்சா மற்றும் போதைப் பொருள் விற்பனை, செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட நடவடிக்கைகளில் வினோத் என்பவன் காவல்துறையினருடன் கைகோர்த்துக் கொண்டு குற்றச் செயல்களில் செயல்பட்டு வருகிறான். சமீபத்தில் போதைப் பழக்கத்திற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தோழர் தவ்பிக்கும் இப்பகுதியில் போதைப் பழக்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களையும், விழிப்புணர்வு இயக்கங்களையும் மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதைப் பொறுத்தக் கொள்ள முடியாத சமூக விரோதக் கும்பலைச் சேர்ந்த வினோத், பாதுஷா மற்றும் அவனது கூட்டாளிகள் தவ்பிக்கை கொடூரமாக வெட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.ஆனால் இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட சமூகவிரோத கும்பலின் தலைவன் வினோத், பாதுஷா, ஆசைத் தம்பி ஆகியோர் கைது செய்யப்படவில்லை.
எனவே, இந்த கொடூர குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகள் வினோத், பாதுஷா, ஆசைத்தம்பி ஆகியோரை உடனடியாக கைது செய்து உரிய சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இப்பகுதியில் போதைப் பொருள் விற்பனையை முற்றிலும் தடுப்பதற்கு காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்த வேண்டுமெனவும், படுகாயமுற்று ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் தவ்பிக் அவர்களுக்கு உரிய மேல்சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் தமிழக அரசையும், தமிழ்நாடு காவல்துறையையும் சிபிஐ (எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.