எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு வேளாண் அறிவியல் உலகுக்கே ஈடு செய்ய முடியாத இழப்பு என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவரும், உணவு உற்பத்தியில் இந்தியா இன்று அடைந்திருக்கும் தன்னிறைவுக்கு முக்கிய பங்காற்றியருமான வேளாண் விஞ்ஞானி பத்மஸ்ரீ எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு ஒட்டுமொத்த வேளாண் அறிவியல் உலகுக்கே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய பாரம்பரிய விளைநிலத்தில் தனது நவீன கனவுகளை விதைத்து, உணவு உற்பத்தியில் இந்தியாவை ஒரு புதிய சகாப்தம் படைக்க செய்ததோடு, உணவிற்காக உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையில் இருந்த இந்தியாவை, தனது பசுமைப் புரட்சியின் மூலம் மாற்றிக் காட்டிய மகத்தான மனிதர் என அனைவராலும் போற்றக்கூடியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
வேளாண்மையில் விஞ்ஞானத்தை புகுத்தி சாதனை படைத்த இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் , இந்திய நிலப்பரப்பில் ஏற்படுத்திய சாதனைகளும் அவர் மேற்கொண்ட வேளாண் ஆராய்ச்சிகளும் இவ்வுலகம் இருக்கும் வரை நிலைத்திருக்கும்” எனக் கூறியுள்ளார்.