எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்புக்கான அகில இந்திய பொதுக் கலந்தாய்வு நடத்தும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கையில் ஒட்டு மொத்தமாக தேசம் முழுவதற்கும் கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் நிராசையாகிவிடும் ஆபத்துகள் உள்ளன.
மத்திய அரசே பொதுக்கலந்தாய்வு நடத்துவதால் தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடைபிடிக்கப்படும் 69% இட ஒதுக்கீடு, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு ஆகியவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கல்வியாளர்கள், மாணவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85% எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்ப கடந்த காலங்களைப் போல மாநில அரசே கலந்தாய்வு நடத்தவும், மீதமுள்ள 15 % இடங்களில் மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தவும் வழிவகை செய்வதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.