சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினர் கேட்ட கேள்விகளில் பெரும்பாலானவை அவருடைய தம்பி அசோக்குமார் பற்றியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
போக்குவரத்து துறை அமைச்சராக அதிமுக ஆட்சியில் இருந்த செந்தில் பாலாஜி மீது வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. அந்த புகாரின் பேரில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணவர்த்தனையின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தது. இது சட்டவிரோதம் என அவரது மனைவி ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து இந்த வழக்கு 3ஆவது நீதிபதியிடம் சென்றது.
அவர் செந்தில் பாலாஜி தனது மீது தவறில்லை என்றால் அதை நிரூபிக்கட்டும். அவரது கைது சட்டவிரோதம் அல்ல என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேல்முறையீடு செய்தார். அது போல் அமலாக்கத் துறை தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், முகுல் ரோத்தகியும் அமலாக்கத் துறை சார்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்கள் வாதத்தை முன் வைத்தனர். செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது முக்கியமானது என அமலாக்கத் துறை தெரிவித்தது. இந்த வழக்கின் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி அன்று உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு கடந்த 7ஆம் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தது.
அதில் செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டப்படி சரியானது. அமலாக்கத் துறை அடுத்த 5 நாட்களுக்கு அதாவது ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டனர். இதையடுத்து செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத் துறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, வரும் 12 ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். செந்தில் பாலாஜியிடம் நேற்று முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஒரு நாளைக்கு 50 கேள்விகள் முன் வைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. டைப் செய்யப்பட்ட கேள்விக்கு செந்தில் பாலாஜி எழுத்து மூலமாக பதில் அளித்து வருகிறார். அவரிடம் கேட்பதற்காக 400 கேள்விகளை அமலாக்கத் துறையினர் தயார் செய்து வைத்திருந்த நிலையில் தற்போது இதுவரை 250 கேள்விகளுக்கு செந்தில்பாலாஜி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில் பெரும்பாலும் அசோக்குமார் பற்றிய கேள்விகளே பெரும்பாலும் இருந்தது. அசோக்குமார் கரூரில் கட்டி வரும் சொகுசு பங்களா குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. செந்தில் பாலாஜி பெரும்பாலும் தெரியாது, ஞாபகம் இல்லை என்றே கூறி வருகிறார். உங்கள் வங்கிக் கணக்கில் 1.34 கோடி ரூபாயும் உங்கள் மனைவி மேகலாவின் வங்கிக் கணக்கில் 29.5 லட்சமும் வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு செந்தில் பாலாஜி அது என் பணம் இல்லை என பதில் அளித்துள்ளார். காலையில் நடைபயிற்சி செல்ல செந்தில் பாலாஜிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.