ஆடி மாதம் தொடங்கி விட்டால் பெரும்பாலும் அம்மன் கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், கூழ் ஊற்றுதல் என சிறப்பு வழிபாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நடந்துவரும். இது போன்ற விழாக்களில் பெரும்பாலும் பெண்களே அதிக அளவு பங்கு பெறுவார்கள். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கார்காவயல்
ஸ்ரீ ஆதிசிவசக்தி சித்தர் ஞானபீடத்தில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் பால்குடம் எடுத்துவந்து வழிபாடு நடத்தினர் பெண்கள்.
தப்பாட்டம் முழங்க பட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ ஆதி சிவசக்தி சித்தர் ஞானபீடத்திற்கு பால்குடம் எடுத்துவந்து தங்களது
நேர்த்திக்கடனை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஞான பீடத்தில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதற்காக ஞான பீடத்தில் யாக குண்டத்தில் 250க்கும் மேற்பட்ட பொருட்களை பக்தர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவந்து போட்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் யாகம் நடத்தப்பட்டது.
பெண்கள் தப்பாட்டம் அடித்து திருவிழாவில் கலந்து கொண்டது இந்த பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இதுபோல திருவிழாக்கள் இந்த பகுதியில் நடைபெறுவது சிறப்பு வாய்ந்ததாகும். மிக நீண்ட தூரம் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்தது பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.