விழுப்புரம் அருகே கஞ்சனூர் பகுதியில் அமைந்துள்ளது பூரிக்குடிசை. இங்கு பனங்காடு அறக்கட்டளை சார்பில் பனை கனவு திருவிழா நடைபெற்று வருகிறது இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு பனைபொருட்கள், பனை உணவு கண்காட்சி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.
விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை என்ற கிராமத்தில் பனங்காடு அறக்கட்டளை சார்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் பனைகனவு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் தொடக்கமாக பூரிகுடி கிராமம் முழுவதுமாக 100-க்கும் மேற்பட்ட பனையேறிகள் ஊர்வலமாக பறை அடித்தும், சிலம்பம் ஆடிவந்தும் பனைமரத்திற்கு படையலிட்டு திருவிழாவினை தொடங்கினர். இதனை தொடர்ந்து பனை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் பனை மரத்திலிருந்து இறக்கப்பட்ட கள்ளை உண்டனர்.

இந்த விழாவில் பனை மரத்தின் மூலம் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பல்வேறு கைவினை பொருட்கள் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு மற்றும் மருந்து பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டு பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கி சென்றனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், பனையேறிகள் தமிழகத்தில் கள் இறக்குவதற்கான தடையை நீக்க வேண்டுமெனவும் கள் ஒரு போதை பொருள் அல்ல என்பதை அனைவரிடத்திலும் கொண்டு செல்லவேண்டும் என வலியுறுத்தினர்.
பனையிலிருந்து பெறப்படுவதைக் கொண்டு, உணவு மற்றும் அழகுப்பொருட்கள் செய்து பொருளாதாரத்தினை உயர்த்த இந்தியாவிலேயே முதல் முறையாக பூரிகுடிசையில் நடைபெறும் பனை திருவிழா அனைவரிடத்திலும் முன்னுதாரணமாக இருக்கும் என தெரிவித்தனர்.
மேலும், இந்த பனை கனவு திருவிழாவின் முக்கிய நோக்கம் என்னவென்றால், பனை ஏறும் தொழிலாளர்களின் முக்கியத்துவம் மற்ற பொதுமக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்த பனை கனவு திருவிழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பனை திருவிழாவுக்கு விழுப்புரம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் சார்ந்த பொதுமக்களும் பார்வையிட்டு செல்கின்றனர்.