வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை தென்மேற்கு வங்கக்கடலில் புயலாகவும் மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை அடையும். அதன் பிறகு, 5 ஆம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயலாக மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் குறித்து வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வடக்கு, வடமேற்கு திசையில் மிக்ஜாம் புயல் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்கிறது. மிக்ஜாம் புயலின் வேகம் 11 கிலோ மீட்டரில் இருந்து 8 கிலோ மீட்டராக குறைந்துள்ளது. மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே 150 கிலோ மீட்டர் முதல் 175 கிலோ மீட்டர் தொலைவுக்கு வரலாம்” என வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காரணமாக நாளை(டிச.04) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ரெட் அலர்ட்), ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை(டிச.4) பள்ளி, கல்லூரி மட்டுமல்லாது அனைத்து நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை.மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு உள்ளது.கடற்கறை ஓரங்களில் பலத்த காற்று வீசப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு,கடலோற மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.