தமிழ்நாடு அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் . நேற்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனான மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா, அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
திமுக ஆட்சியின் ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் அமைச்சர் நாசர். அமைச்சராக பதவியேற்ற சில மாதங்களிலேயே, கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தினால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது திமுக ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணமே கிறிஸ்தவர்களின் ஜெபம்தான் என பொதுக்கூட்டத்தில் நாசர் பேசியது திமுக தலைமையை அதிர்ச்சியடையவைத்தது.

சமீபத்தில் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நாசர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நாற்காலிகளை எடுத்துப் போட தாமதம் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த நாசர், கீழே கிடந்த கற்களை தொண்டர்களை நோக்கி வீசி எறிந்தார். இந்த வீடியோ, படங்கள் பஞ்சாயத்தை இழுத்துவிட்டது. அப்போது திமுகவை கற்கால திமுக என அதிமுக கிண்டலடித்தது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தற்போது 3-வது முறையாக மாற்றம் செய்யப்படுகிறது.
இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நாளை காலை 10.30 மணி அளவில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்றுத் தமிழ்நாடு ஆளுநர் ரவி இதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளார்.

இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது இந்த அறிவிப்பு வெளியானத்திலிருந்து தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பால்வளத்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதன் காரணமாக திமுக சார்பில் நடைபெற்ற இரண்டு ஆண்டு சாதனைகள் பொதுக்கூட்டத்தை அமைச்சர் நாசர் புறக்கணித்தார்.
திருவேற்காடு மற்றும் பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட சென்னீர் குப்பம் பகுதியில் தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டுக் கால சாதனை குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த விழாவின் ஒரு பகுதியாக திருவேற்காட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கலந்து கொண்டு உரையாற்றினார். அதற்குப் பிறகு சென்னீர் குப்பம் பகுதியில் நடைபெற்ற திமுக சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நாசர் பங்கேற்பதாக இருந்தது.
மேலும் அந்த கூட்டத்திற்கு அவர் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது அமைச்சர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்று செய்தி வெளியானது.
இந்த செய்தியைக் கேட்ட அமைச்சர் நாசர் திமுகவின் இரண்டு ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் அப்படியே காரில் வேகமாகக் கிளம்பிச் சென்று விட்டார். இதனால் அந்தக் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.