- சென்னையில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை சென்னையில் மழை பெய்துக்கொண்டிருக்கிறது. இடையில் கேப் இருந்தாலும், தொடர் மழை காரணமாக தாழ்வான இடங்களில் நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், மாலை 4 மணி வரை சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருக்கிறது.
வடகிழக்கு பருவமழை வந்தாலே சென்னை நசநசத்துவிடும். வழக்கமாக நவம்பர், டிசம்பர் காலத்தில்தான் மழை தீவிரமெடுக்கும். ஆனால் இந்த முறை அக்டோபரிலேயே வேலையை காட்ட தொடங்கிவிட்டது. காரணம் காற்றழுத்த தாழ்வு பகுதிதான். நேற்று காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.
இது இன்றும் நாளையும், வட தமிழகம், புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரும். எனவே இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. முன்னெச்சரிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்திருந்தனர்.
குறிப்பாக வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் தங்கள் கார்களை பாதுகாப்பாக மேம்பாலத்தின் மீது நிறுத்தியிருந்தனர். மழை குறித்து விளக்கமளித்த தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “சென்னையில் 6000 சதுர கி.மீ பரப்பளவில் பெய்யும் மொத்த மழையும் நான்கு வழிகளில் எண்ணூர், நேப்பியார், அடையாறு, ஒக்கியம் வழியாக கோவளம் , மட்டுமே வெளியேறுகிறது. சென்னையால் 15 செ.மீ மழையை தாங்க முடியும். 20 செ.மீ பெய்தால் ஒரு நாள் நீர் தேங்கும். 30 செ.மீ மழை பெய்தால் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, முடிச்சூர் போன்ற நீர்நிலைகளுக்கு அருகே உள்ள பகுதிகளில் கண்டிப்பாக மழைநீர் தேங்கும்.
40 செ.மீ மழை பெய்தால் 4 நாட்கள் நீர் தேங்கும் என்ற சூழலில்தான் உள்ளோம். மழைநீர் வடிகால் என்பது சாலைக்காக போடப்படுவது. 40 செ.மீ அளவுக்கு பெய்யும் மழைக்காக வடிகால் அமைக்க முடியாது. நம் பகுதியின் சூழலை புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்” என்று கூறியுள்ளார். சூழல் இப்படி இருக்கையில் மாலை 4 மணி வரை சென்னை உட்பட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/leave-schools-due-to-rain-do-not-conduct-online-classes-minister-anbil-mahesh-request/
அதாவது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருப்பத்தூருக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கோவை, குமரி, நெல்லை, தேனிக்கு மாலை 4 மணி வரை மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.