சேலத்தில் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்த ஆட்டோ ஓட்டுரின் சடலத்துடன் இரண்டு நாட்களாக அவருடைய தாயார் இருந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் உமாசங்கர் ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். இவரது தாய் ராஜேஸ்வரி உமாஷங்கரின் மனைவி கடந்த 15 ஆண்டுக்கு முன்னர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் உமாசங்கர் தனது தாயார் ராஜேஸ்வரியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
ராஜேஸ்வரி சற்று மனநலம் பாதித்தவர் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக வீடு திறக்கப்படாமல் இருந்தது மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது இதையடுத்து அவர்கள் பள்ளப்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராஜேஸ்வரி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, உமாசங்கர் படுக்கையில் சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உமாசங்கர் இரு நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். உமாசங்கர் எப்படி உயிரிழந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைப்பெற்று வருகிறது.
மகன் இறந்தது கூட தெரியாமல் அவருடைய தாயார் வீட்டுக்குள்ளேயே உண்ண உணவு இல்லாமல் மகனின் சடலத்துடன் இரண்டு நாள் வசித்து வந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.