பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரம் மற்றும் முதியோர் பராமரிப்புத் துறை ஆகியவற்றுக்கு இடையே விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே விளையாட்டுத் துறையில் இருதரப்பு பரிமாற்றத் திட்டங்கள், விளையாட்டு அறிவியல், தொழில்நுட்பங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை விரிவுபடுத்த இந்த ஒப்பந்தம் உதவும். விளையாட்டு வீரர் மற்றும் பயிற்சியாளர் பயிற்சி மற்றும் மேம்பாடு, விளையாட்டு நிர்வாகம் மற்றும் ஒருமைப்பாடு, முக்கிய விளையாட்டு நிகழ்வுகள், பன்முகத்தன்மை ஆகியவற்றுக்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.
இது சர்வதேச போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், இந்தியாவுக்கும்- ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.
ஆஸ்திரேலியாவுடனான விளையாட்டுத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பால் ஏற்படும் நன்மைகள் சாதி, மதம், பிராந்தியம், மற்றும் பாலின பாகுபாடின்றி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சமமாக பொருந்தும்.