கச்சா எண்ணெய் அகழ்வு மற்றும் சுத்திகரிப்பின் போது வெளியேற்றப்படும் கழிவு நீரை மீட்டெடுக்க உதவும் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாவர அடிப்படையிலான உயிர்மப்பொருள், பயோசர்பாக்டான்ட் மற்றும் என்பிகே உரம் ஆகியவற்றைக் கொண்ட கலவையாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் அகழ்வுப்பணி, சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் போது கழிவு நீர் பெரும் அளவுகளில் வெளியேற்றப்படுகிறது. இது எண்ணெய்த் தொழிலில் பல்வேறு கட்டங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய்க் கூறுகள், உப்புக் கரைசல்கள் மற்றும் கரைப்பான்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது வழக்கமாக வெளியேற்றப்பட்டு ஆறுகள் மற்றும் ஓடைகளை அடைந்து, நீரின் தரத்தை மாசாக்குகிறது. இதனால் ஆறுகள், ஓடைகளில் உள்ள நீர்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அத்தகைய அசுத்தமான இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட மீன், தாவரங்கள், பெரிய விலங்குகளின் நுகர்வு அபாயத்தை ஏற்படுத்தலாம். இத்தகைய பாதிப்புகளைத் தடுக்க, கழிவுநீரைச் சுத்திகரிப்பது அவசியமாகிறது.
இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆய்வுக் கழகத்தின் விஞ்ஞானிகள் டாக்டர். அருந்துதி தேவி தலைமையில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். பல சோதனைகள் மற்றும் ஆய்வுகள் மூலம், தாவர அடிப்படையிலான உயிர்ப்பொருள், நுண்ணுயிரிகளின் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றங்களான பயோசர்பாக்டான்ட் மற்றும் என்பிகே உரம் ஆகியவற்றைக் கொண்ட கலவையை உருவாக்கியது. சுமார் 2.5 கிராம் பொருள் ஒரு லிட்டர் கலவை தண்ணீரை 12 மணி நேரத்தில் சுத்திகரிக்க முடியும். இந்தக் குழு வளர்ச்சிக்கான இந்தியக் காப்புரிமையை தாக்கல் செய்துள்ளது.
இந்த “அதிசயக் கலவை” நீர் உருவாக்கத்தில் இருந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க உதவுவதுடன், பசுமைப் புரட்சியை பராமரிக்க பயன்படுத்த உதவுகிறது. இது தொடர்ந்து வளர்ந்து வரும் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.