மராட்டியத்தில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி.
மராட்டிய மாநிலம் யவத்மாலில் இருந்து புனே நோக்கி 32 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்து சம்ருத்தி மஹாமார்க் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பேருந்தின் டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது.
பேருந்து தீப்பிடித்ததால், அதனுள் இருந்த பயணிகளில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலை 2 மணியளவில் இந்த பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல் மந்திரி நிவாரணம் அறிவித்துள்ளார். உயிரிழந்த 26 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை என்றும் அம்மாநில முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மேலும்,பாரத பிரதமர நரேந்திர மோடியும் நிவாரணம் அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய்.2 லட்சம் நிவாரணம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனையில் இன்று நேரில் சந்திக்க உள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “சம்ருத்தி நெடுஞ்சாலையில் பேருந்து விபத்துக்கு சாலை கட்டுமானம் காரணமல்ல. பேருந்து விபத்து சம்பவத்தில் தேவைப்பட்டால் டிஎன்ஏ பரிசோதனை மூலம் உடல்கள் அடையாளம் காணப்படும்” என்று அவர் தெரிவித்தார்.