மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் எம்பிக்கள் இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேசினர்.
மணிப்பூரில் குகி, மைத்தேயி ஆகிய சமூகத்தினருக்கு இடையே வன்முறை நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 3ஆம் தேதி முதல் இந்த வன்முறை நீடித்து வருகிறது. இந்த நிலையில் மே 4 ஆம் தேதி எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோவில் இரு பெண்களை நிர்வாணமாக இழுத்து வரும் கலவரக்காரர்கள் அவர்களை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் இரண்டரை மாதங்களாக எந்த நடவடிக்கையையும் மத்திய மாநில அரசுகள் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சூழலில் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 29 ஆம்தேதி முதல் தொடங்கியது. சுமார் இரண்டரை மாதங்கள் கழித்து அன்றைய தினம் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி 30 வினாடிகள் பேசியிருந்தார். அதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என தினந்தோறும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையடுத்து பிரதமர் பதில் அளிக்கும் விதமாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனிடையே இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள எம்பிக்கள் மணிப்பூரை நேரில் சென்று ஆய்வு செய்ய முடிவு செய்து 21 பேர் கொண்ட குழுவினர் இரு நாட்கள் மணிப்பூர் சென்றனர்.
அங்கு நிலவும் சூழலை நேரடியாக ஆய்வு செய்தனர். இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் அனுமதி கேட்டனர்.
அதன்படி, இன்று காலை குடியரசுத் தலைவர் மாளிகையில் முர்முவை அவர்கள் சந்தித்தனர். அப்போது மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். திமுக சார்பில் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ ராசா உள்ளிட்டோர் சென்றிருந்தனர். காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்களும் முர்முவை சந்தித்தனர்.