மணிப்பூரில் கடந்த 5 நாட்களாக மிகப்பெரிய வன்முறையும், கலவரமும் வெடித்து வருகிறது.

2 Min Read
போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்

மணிப்பூரில் கடந்த 5 நாட்களாக மிகப்பெரிய வன்முறையும், கலவரமும் வெடித்து வருகிறது. மணிப்பூரில் பரவலாக வசிக்கும் ‘மெய்டெய்ஸ்’ சமூக மக்கள் தங்களுக்கு பழங்குடியினர் (scheduled Tribe) அந்தஸ்து வழங்கக் கோரி கடந்த வாரம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

- Advertisement -
Ad imageAd image

இவர்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், அந்த சமூக மக்களுக்கு எஸ்டி அந்தஸ்து கிடைப்பதற்கான சூழல் நிலவியது.

இதற்கு மணிப்பூரில் உள்ள பழங்குடி சமூக மக்கள் மத்தியில்  கடும் அதிருப்தி ஏற்பட்டது .இதனால்  மெய்டெய்ஸ் சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து தரக்கூடாது எனக் கூறி, பழங்குடியின மக்கள் கடந்த சில தினங்களாக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூரில் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தப் போராட்டமானது பழங்குடி மக்களுக்கும், பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையேயான மோதலாக மாறி, பின் கலவரமாக வெடித்தது.இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதுடன் வீடுகள், கட்டிடங்களுக்கும் தீ வைத்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

மோதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மோதலை தடுக்க வரும் போலீஸார் மீதும் இரு தரப்பினருமே தாக்குதல் நடத்துவதால், போலீஸாரால் ஊருக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடந்த 4  தினங்களாக மணிப்பூர் கலவர பூமியாக உருவெடுத்து வருகிறது.

நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்த மத்திய உள்துறை அமைச்சகம், ராணுவத்தினரையும், துணை ராணுவ வீரர்களையும் மணிப்பூருக்கு அனுப்பிவைத்தது . ஆனால், அவர்களாலும் இந்தக் கலவரத்தை அடக்க முடியவில்லை.

ராணுவத்தினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலவரத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால், இருதரப்பு மக்களுமே மிகுந்த ஆக்ரோஷமாக இருப்பதால் அவர்களை அடக்குவது சிரமமான காரியமாக மாறியது. 144 தடை உத்தரவு பிறப்பித்த போதிலும் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை.

இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பிரென் சிங் தலைமையில்  நேற்று முந்தினம் மாலை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராணுவ உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, தங்களுக்கு சற்று அதிக அதிகாரம் கொடுத்தால் மட்டுமே கலவரத்தை கட்டுப்படுத்துவது சாத்தியமாகும் என ராணுவத் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, கலவரக்காரர்களை கண்டதும் சுடுமாறு மணிப்பூர் அரசு அதிரடியாக உத்தரவிட்டது.

Share This Article
Leave a review