நேற்று திருச்சி ஜி கார்னரில் ஓபிஎஸ் அணி சார்பில் அதிமுக தொண்டர்கள் மாநாடு நடைபெற்றது.
அப்போது மேடையருகே இடுப்பில் கத்தியுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்து பொன்மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஸ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த கருத்தபாண்டி என்பது தெரிய வந்தது. அவரிடம் மீண்டும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கு எதிரிகள் அதிகம் இருப்பதால் எப்போதும் கத்தியுடன் இருந்து வருவதாக வாக்கு மூலம் அளித்தார்.

இவர் மீது ஒரு கொலை வழக்கு இருப்பதாகவும் தன்னை பாதுகாத்து கொள்ள கத்தி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களிடம் இவரை பற்றிய பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர் பொன்மலை போலீசார். ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் என்னவாயிருக்கும் என அச்சத்தில் இருக்கிறார்கள் போலீசார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்திற்கு ஒ.பன்னீர்செல்வம் வந்தபோது இதே போன்று ஒரு நபர் கத்தியுடன் சுற்றித்திரிந்தபோது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.