காவிரிப்படுகை முழுவதையும் வேளாண் மண்டலமாக கொண்டு வருக..!

3 Min Read
பேராசிரியர் த.செயராமன்

2020 பிப்ரவரி மாதம், தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. எண்ணெய் -எரிவாயுத் திட்டங்களால் காவிரிப் படுகை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதை அச்சட்டம் ஒத்துக் கொண்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை வரையறுத்து அறிவித்தது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் எடுப்பு உள்ளிட்ட சில திட்டங்களை நடைமுறைப்படுத்த தடைவிதித்தது.

- Advertisement -
Ad imageAd image

இச்சட்டம் அறிவித்தபடி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், கடலூர் மாவட்டத்தில் 5 பிளாக்குகள் (காட்டுமன்னார்கோவில், மேல்புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை), புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐந்து பிளாக்குகள் (அறந்தாங்கி, ஆவுடையார் கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி) ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியாக அறிவிக்கப்பட்டன.

அன்றைய நாகை மாவட்டம் என்பது மயிலாடுதுறை மாவட்டத்தையும் உள்ளடக்கியது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது பிப்ரவரி 2020இல் அறிவிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை நாகை மாவட்டத்தின் பகுதி என்ற வகையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் பகுதியாக இருந்தது.

பேராசிரியர் த.செயராமன்

நிர்வாக வசதி கருதி, டிசம்பர் 2020இல் மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் உருவாக்கப்பட்ட போதும் அதன் பகுதியாக மயிலாடுதுறை இருந்தது; அதன் பிறகும் பாதுகாக்கப்பட்ட மேலாண் மண்டல பகுதியாகவே அது தொடர்கிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை தனி மாவட்டம் ஆனதால், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியாக அதை குறிப்பதற்காக, 2020- ஆம் ஆண்டு சட்டத்தில் ஒரு திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. இத்திருந்தத்தால்,அடிப்படையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்பட்டு விடவில்லை.

நாம் கோரும் திருத்தம்:

திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதியில் சேர்க்கப்பட வேண்டும். வளமான வேளாண்பகுதிகள் முழுமையாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் இன்னமும் சேர்க்கப்பட்டு அறிவிக்கப்படவில்லை.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீராணம் ஏரி பாசனப் பகுதி முழுமையாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள் கொண்டு வரப்படவில்லை. வடக்காவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றின் நீரை சேமிக்க வீராணம் ஏரி வெட்டப்பட்டது. அது கடலூர் மாவட்டத்தை வளப்படுத்துகிறது. ஆனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் முழு கடலூர் மாவட்டமும் சேர்க்கப்படவில்லை. (புவனகிரி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், விருத்தாச்சலம் ஆகியவை கடலூர் மாவட்டத்தின் பகுதிகள்.) கடலூர் மாவட்டத்தின் பெரும் பகுதி பெரிதும் காவிரி நீர்ப் பாசனத்தைப் பெறுகின்றன.

நீண்ட காலமாக காவிரி பாசனப்பகுதியாக இருக்கும் பகுதிகளிலும் கூட பல கிராமங்களை காவிரி படுகை பகுதியில் இருந்து விலக்கி அரசால் கடந்த காலத்தில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மும்முனை மின்சாரம், பயிர் காப்பீடு போன்ற வாய்ப்பு-வசதிகள் அக்கிராமங்களுக்கு மறுக்கப்பட்டன.

காவிரி படுகை முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட வரம்புக்குள் கொண்டு வருவது தமிழ்நாட்டின் உணவு உறுதிப்பாட்டைப் பாதுகாக்க உதவும். இதை உடனடியாக தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும்.

2014 ஜூலை 12ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் “காவிரிப் படுகை பாதுகாப்பு – மீத்தேன் திட்ட எதிர்ப்பு” முதல் மாநாட்டில் காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அறிவிக்க கோரி தீர்மானம் இயற்றினோம். அதைத் தொடர்ந்து ஒரு கோடி கையெழுத்து இயக்கம், நீண்ட தூர, மற்றும் குறுகிய காலப் பரப்புரைப் பயணங்களும் மேற்கொள்ளப்பட்டன. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று மாநாடுகளையும், சில கருத்தரங்குகளையும், பொதுக்கூட்டங்களையும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நடத்தியுள்ளது. தொடர்ந்து போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

பேராசிரியர் த.செயராமன்

2020 ஆம் ஆண்டு இக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், போதாமைகள் இருந்தாலும், 2020 ஆம் ஆண்டு ஒரு சட்டத்தைப் பெற்றோம்.

(1) ஆனால், பழைய எண்ணெய் -எரிவாயுத் திட்டங்கள் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

(2) காவிரிப் படுகை முழுவதையும் இச்சட்ட வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். அதற்குரிய திருத்தங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டத்தில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்று வேண்டுகிறோம்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டம் என்பது ஒரு தொடக்கப் புள்ளி மட்டுமே அதை அடிப்படையாக வைத்து நாம் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. தன் கடமையை உணர்ந்து தமிழ்நாடு அரசு எமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுகிறோம்.பேராசிரியர் த.செயராமன் தெறித்துள்ளார்.

Share This Article
Leave a review