- படிக்காத தனது நண்பர்களையும் திருத்தி – அவர்களையும் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுரை.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி சேதுபாவாசத்திரம் அரசு பள்ளியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவர்களுடன் உரையாடினார். அப்போது மாணவர்களுக்கு ஒவ்வொரு காலாண்டு தேர்வையும் பொதுத்தேர்வு போல் எண்ணி எழுத வேண்டும். அவ்வாறு எழுதும்போது பொதுத்தேர்வை ஒரு கிளாஸ் டெஸ்ட் போல பயமின்றி எழுத வேண்டும் என அவர் அறிவுரை வழங்கினார். வேறு பள்ளி தேர்வு மையங்களில் தேர்வு எழுத சென்றாலும் பதட்டமின்றி பயமின்றி அதுவும் ஒரு வகுப்பறை தான் என்று எண்ணி தேர்வை எழுத வேண்டும் என்றார். ஒன்பதாம் வகுப்பு வரை விளையாட்டுத்தனமாக இருப்பீர்கள், ஆனால் 10,11,12 வகுப்பின் போது கவனத்துடன் படிக்க வேண்டும் இந்த மூன்று ஆண்டுகளும் உங்களுக்கான ஆண்டாக எண்ணி படிக்க வேண்டும் என்றார். காலாண்டு தேர்வை பொதுத் தேர்வு போல எண்ணி எழுத வேண்டும் அவ்வாறு எழுதினால் பொதுத்தேர்வு வரும் போது அந்த பொதுத் தேர்வினை கிளாஸ் எக்ஸாம் போல பயமின்றி எழுதலாம் என்றார்.
மேலும் தங்களுடைய நண்பர்கள் தேர்விற்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கு என கூறுவார்கள், அவர்களையும் நீங்கள்தான் திருத்தி அவர்களை படிக்க வைத்து தேர்ச்சி பெற வைக்க வேண்டும். ஒவ்வொரு மாணவனும் உங்களுடைய பொறுப்பு என்று எண்ணி அவர்களை தேர்வில் வெற்றி பெற வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார். படிப்பது மட்டுமில்லாமல் ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.