- சோழவரம் அருகே பழமைவாய்ந்த பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடை முனிவேல் நகரில் சுமார் நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் புணரமைப்பு பணிகள் நிறைவடைந்து புதுப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலையில் நான்கு கால பூஜையுடன் தொடங்கப்பட்ட கும்பாபிஷேக விழாவில் வாஸ்து சாந்தி, காப்புக்கட்டுதல், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.இதையடுத்து யாகம் நடத்தப்பட்டு யாக குண்டத்தில் பூர்ணாஹதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ கோபுர கலசத்திற்கு புன்னிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரை வெங்கடேச பெருமாள்மீது ஊற்றி ஆச்சார்யார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வணங்கினர். இதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து வெங்கடேச பெருமாளுக்கும் ஆஞ்சநேயருக்கும் மஹாதீபாராதனை காட்டப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்களுக்கு அன்னதானம் மற்றும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.