மாட்டுத்தாவணி அருகே சாலையோரம் உள்ள பெட்டிக்கடை உரிமத்தை புதுப்பித்து தரக்கோரி மாற்றுத்திறனாளி தொடர்ந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது .
இதனை விசாரித்த நீதிபதிகள் , மாவட்ட நீதிமன்றம் முதல் வேளாண் கல்லூரி வரை எத்தனை பெட்டிக்கடைகள் உள்ளன என அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு .
மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த செந்தாமரைச்செல்வி தாக்கல் செய்த மனுவில் : எனது இடது கால் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளியான நான், மாட்டுத்தாவணி நெடுஞ்சாலையில் பிரபல மருத்துவமனை அருகில் பெட்டிக்கடை நடத்த விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை பரிசீலித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 2012-ம் ஆண்டு அனுமதி அளித்தனர்.

அதன்படி பல லட்சம் ரூபாய் செலவு செய்து அங்கு கடையை தொடங்கினேன். அதற்கான வாடகை தொகையையும் நெடுஞ்சாலைத்துறையிடம் செலுத்தினேன். இந்தநிலையில் கடையின் உரிமத்தை புதுப்பித்து தராமல் அதிகாரிகள் இழுத்தடித்தனர். இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
அப்போது, கடையின் உரிம் போலியானது என பொய்யான தகவல் தெரிவித்தனர். ஆனாலும் என்னுடைய மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பின்பும் கடை உரிமத்தை புதுப்பித்து தரவில்லை. இந்த கடையின் மூலமாகத்தான் எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறேன். எனவே மாட்டுத்தாவணி அருகில் என்னுடைய கடைக்கு உரிமத்தை புதுப்பித்து வழங்கும்படி நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/madras-high-court-dismisses-nithyanandas-petition-to-be-made-mutt-head/
அப்போது நீதிபதிகள், மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி வரை உள்ள நெடுஞ்சாலையில் எத்தனை பெட்டிக்கடைகள் உள்ளன என நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 23 தேதிக்கு ஒத்திவைத்தனர்.