- மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
பத்திரிக்கை, தொலைக்காட்சி, ஊடகங்களில் மருத்துவர்கள், மருத்துவ மனைகள் தொடர்பான விளம்பரங்களை முறைப்படுத்த கோரி மங்கையர்கரசி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த விளம்பரங்கள், பொதுமக்களை தவறாக வழிநடத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ சிகிச்சைகள் தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட, போலியான விளம்பரங்களை கொடுத்து மக்களை நம்ப வைக்குப் படுவதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
போலி மருத்துவர்கள், போலி மருந்துகள், மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவமனைகளை ஊக்கப்படுத்தும் வகையிலான விளம்பரங்களை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம், செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வு, மருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த ஒவ்வொரு விளம்பரங்களையும் ஊடகங்கள் சரிபார்த்து வெளியிட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என தெரிவித்தனர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/ganda-sashti-festival-and-thirukalyanam-was-held-in-thanjavur-in-the-blessed-karunasamy-temple/
விதிகளை மீறி செயல்படும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும். மனுதாரர் இது சம்பந்தமாக மருத்துவ ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என தெரிவித்த நீதிபதிகள், போலியான மருத்துவமனைகள், மருத்துவர்கள் விளம்பரங்களை வெளியிட்டால் அது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டங்கள் இருப்பதால், விளம்பரங்கள் வெளியிடும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்படையாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.