நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, மனநல காப்பகத்தில் சேர்க்க எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும்படி 2009ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி, வேதாரண்யத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், சாலையில் சுற்றித் திரியும் மனநலம் பாதித்தவர்கள், பொது மக்கள் மீது கற்களை வீசி தாக்குவதாகவும், உயர் நீதிமன்றம் 2009ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
மனநலம் பாதிக்கப்பட்ட இவர்களை, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் காசிநாத பாரதி ஆஜராகி, வேதாரண்யம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலைகளில் சுற்றித் திரிகிறார்கள்.

சென்னையில் பாரிமுனையில் கூட மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் சாலை ஓரங்களில் உள்ளனர். இவர்களை மீட்டு காப்பகங்களில் அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அருகில் உள்ள காவல் நிலையங்களில் தகவல் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வகையில் தமிழகம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
கடந்த 2009ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மனநல காப்பகத்தில் சேர்க்க எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.