சிபிசிஐடி எடுத்த நடவடிக்கை, சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு.

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்
  • ஆயுள் தண்டனை கைதி சிறைக்குள் தாக்கப்பட்ட விவகாரத்தில் டிஐஜி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்த சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்

வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின் அங்கு பணம் நகையை திருடியதாகக் கூறி அவரை தாக்கியதாக, அவரது தாய்  கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.சிவக்குமாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும், மகனை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேலூர் சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு அவரை மாற்ற உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டிஐஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில் , இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், என்.செந்தில் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

- Advertisement -
Ad imageAd image

அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ்திலக், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சீல் வைக்கப்பட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்தார்.அதனை படித்துப் பார்த்த நீதிபதிகள், நீதிமன்றம் உத்தரவிட்டதும் உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்காக சிபிசிஐடிக்கு பாராட்டு தெரிவித்தனர்.மேலும், இந்த ஒரு வழக்கு மட்டுமின்றி மற்ற விவகாரங்கள் குறித்தும் முழுமையாக சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், சீர்திருத்தம் செய்யும் இடமாக உள்ள சிறையில் கைதிகள் முறையாக நடத்தப்படவில்லை என்றால், அவர்கள் வெளியில் வந்த பிறகும் குற்றச்செயலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர். இந்த வழக்கை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியுள்ளதாக கூறிய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Share This Article
Leave a review