சென்னை சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் நிலங்கள் தனிநபருக்கு விற்கப்பட்டது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
70 ஆண்டுகள் பழமையான சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் நிலத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து பள்ளி நிலத்தை மீட்டு தர கோரி முன்னாள் மாணவர் தொடர்ந்த வழக்கில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரம் பிள்ளை கல்வி அறக்கட்டளைக்காக கடந்த 1959 ஆம் ஆண்டு ஏரி புறம்போக்கு நிலத்தை கல்வி பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டு சுமார் ஒன்றேகால் ஏக்கர் நிலப்பரப்பில் சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகின்றது . இந்த பள்ளியில் இது வரை பல லட்சம் மாணவர்கள் கல்விபயின்று வாழ்வில் மேன்மை அடைந்துள்ளனர் .
இப்படியான வரலாறு இந்த பள்ளிக்கு இருக்க , இந்த பள்ளிக்கு சொந்தமான நிலங்களை பள்ளி நிர்வாகத்தினர் முறைக்கேடாக தனி நபர் பெயர்களில் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
வழக்கின் விவரம் :
இவ்வாறு பள்ளிக்கு சொந்தமான இடங்களில் கட்டிய வீடுகளை இடித்து பள்ளியின் நிலங்களை மீட்க உத்தரவிடக் கோரி பள்ளியின் முன்னாள் மாணவரும், வழக்கறிஞருமான சிவசுப்பிரமணி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதன் காரணமாக பள்ளிக்கு தேவையான புதிய கட்டிடம் மற்றும் வகுப்பறைகளை கட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. சிங்காரம்பிள்ளை பள்ளிக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்ததால் சில தனிநபர்கள் அந்த நிலத்தில் பெரிய கட்டிடங்கள் கட்டி வருவதாகவும், இதில் முக்கியமாக பள்ளியின் வளாகம் காய்கனி விற்கும் சந்தையாகவும், பள்ளிக்கு சொந்தமான டென்னிஸ் விளையாடும் மைதானம் வெளிநபர்கள் விளையாடும் இடமாகவும், பள்ளியின் வாயில் பகுதிகளில் உணகங்கள், கடைகள் என வர்த்தக பயன்பாட்டிற்கும் விடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக முதல்வர் தனிப்பிரிவிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த மனுவில் சிவசுப்பிரமணி தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், குமரேஷ்பாபு அமர்வு , சிங்காரம்பிள்ளை பள்ளியின் நிலம் தனி நபர்களுக்கு விற்கப்பட்டது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திற்கும் தனி நபர்களுக்கும் இடையே கூட்டு சதி ஏதேனும் உள்ளதா என்பதை விசாரிக்க வேண்டும் பள்ளிக்கல்வி துறை இயக்குனருக்கு உத்தரவிட்டார் மேலும் பள்ளியில் நடந்த விதிமீறல்கள் குறித்து மனுதாரர் 2 வாரத்திற்குள் பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு விரிவான புகார் மனு அளிக்க வேண்டும் என்றும் அந்த மனுவின் அடிப்படையில் பள்ளிக்கல்வி துறை இயக்குனர் 12 வாரங்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.