- கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதிகளை நான்கு வாரங்களில் செய்து கொடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்வராயன் மலைப் பகுதி மக்களின் சமூக , பொருளாதார மேம்பாடு தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த பகுதியில் செய்யப்பட்டுள்ள பேருந்து போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் , இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர்கள் காணொலியில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
அப்போது, சேலம் கோட்டம் சார்பில் கல்வராயன் மலைப் பகுதியில் தற்போது இரண்டு மினிப் பேருந்துகளும், விழுப்புரம் கோட்டம் சார்பில் 10 பேருந்துகளும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி, விழுப்புரம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் போதுமான அளவில் இல்லை என்றும், தாங்கள் வசிக்கும் கிராமத்தில் இருந்து பிரதான சாலைக்கு வருவதற்கே 20கிலோ மீட்டர் நடந்து வரக்கூடிய சூழல் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் லாபத்தை கருத்தில் கொள்ளாமல் கூடுதல் மினிப் பேருந்துகளை இயக்க வேண்டும் எனவும் அப்போது தான் அந்த பகுதி மக்கள், மாணவர்கள் பயனடைவர் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், கல்வராயன் மலைப் பகுதிக்கு தேவையான பேருந்து வசதிகளை நான்கு வாரங்களில் ஏற்படுத்தி தர சேலம் மற்றும் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.