மே 18
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் இந்திய அரசு தடை விதித்திருப்பது தவறான செயல் என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.மேலும் பிரபாகரன் நலமாக, பத்திரமாக இருக்கிறார். உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றார்.
ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை முள்ளிவாய்கால் முற்றத்தில் மே 18 நினைவு அனுசரிக்கப்படுவது வழக்கம்.இந்த ஆண்டும் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாள் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது இதில் தமிழீழ ஆதரவாளர்கள் ஏராளமான கலந்து கொண்டு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். அப்போது தமிழீழத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

பழ.நெடுமாறன் பேட்டி
விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்கெனவே அழித்துவிட்டதாக சிங்கள அரசு 2009 ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்கு இந்திய அரசும் துணையாக இருந்தது. இரு அரசுகளும் இல்லை எனக் கூறிய ஒரு இயக்கத்துக்கு இப்போது தடை விதிக்க வேண்டிய அவசியம் என்ன. தமிழ்நாட்டிலோ, இந்தியாவின் வேறு எந்தப் பகுதியிலோ விடுதலைப் புலிகள் இயக்கம் செயல்படவில்லை. இந்நிலையில், யாரை திருப்திபடுத்துவதற்காக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.விடுதலைப் புலிகள் கேட்கும் தமிழீழம் என்பது இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் சேர்த்துதான் அவர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர் என்றும், அது இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது எனவும், எனவே தடை விதிக்கிறோம் என முற்றிலும் தவறான காரணத்தைக் கூறியிருக்கின்றனர்.
பிரபாகரன் நலமாக உள்ளார்
விடுதலைப் புலிகள் தங்களுடைய கொள்கைகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தகங்களாக வெளியிட்டுள்ளனர். அவர்களுடைய பிரசுரங்கள் எதிலும் தமிழ்நாட்டையும் சேர்த்துதான் தமிழீழம் என்பதாகச் சொல்லப்படவில்லை. ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிப்பது என்பது இந்தியாவின் கண்ணியத்துக்கு பெரும் இழுக்கைத் தேடித் தரும்.
இந்திய அரசு மீண்டும், மீண்டும் தவறான காரணங்களைக் கூறுவது மட்டுமல்லாமல், சிங்கள அரசை தாஜா செய்யும் கொள்கையைப் பின்பற்றுகிறது. அது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும், தற்போதைய பாஜக ஆட்சியிலும் கையாளப்படுகிறது. இதனால், எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.
இந்திய அரசு தவறான கொள்கையைப் பின்பற்றுவதன் விளைவாக சீன அபாயத்தை இந்தியாவின் எல்லைக்கு அருகே கொண்டு வந்துவிட்டது. இந்த அபாயத்திலிருந்து மீள வேண்டுமானால் இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கென நாடு அமைய வேண்டும். இல்லாவிட்டால் இந்த அபாயத்தைத் தடுக்க முடியாது என்பதை இந்திய அரசு உணர வேண்டும்.பிரபாகரன் நலமாக, பத்திரமாக இருக்கிறார். உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றார் நெடுமாறன்.