இந்தியில் பெரிய ஹீரோக்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திஷா பதானி, சூர்யா ஜோடியாக “கங்குவா” படத்தில் நடித்து தமிழ் திரை உலகிலும் அறிமுகமாகியுள்ளார். கமலஹாசன், பிரபாஸ் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் ”கல்கி 2898 ஏடி” படத்திலிம் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த நிலையில் நடிகையான அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் இருந்து., ”எங்கள் வீட்டில் மிலிட்டரி டிசிப்ளின் இருக்கும். அந்த டிசிப்ளின் மும்பைக்கு வந்த பிறகு எனக்கு மிகவும் பயன்பட்டது. திடீரென வாசலை தாண்டி வெளிய உலகத்தில் அடி எடுத்து வைத்தேன். எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைத்த மாதிரி இருந்தது. என்னை சுற்றி பெரிய நண்பர்கள் கூட்டம். விலை உயர்ந்த ஆடம்பரமான வாழ்க்கையை பார்த்தேன். இவையெல்லாம் என்னை கொஞ்சம் கூட மாற்றவில்லை. மிகவும் டிசிப்பிளினாக வாழ்கிறேன்.

சயின்டிஸ்ட் ஆக வேண்டும் என நான் முடிவு செய்து இருந்தேன். சினேகிதி எனக்கு தெரியாமலே அழகி போட்டிக்கு எனது பெயரை கொடுத்து விட்டார். பலவந்தமாக என்னை கேட்வாக் செய்ய வைத்தார். எனக்கு கிரீடம் கிடைத்தது. மாடலிங் வாய்ப்புகள் குவிந்தது. அவ்வளவுதான் இரவோடு இரவாக என் உலகமே மாறிவிட்டது. கேமரா முன் நின்ற உடனே எனது கூச்ச சுபாவம் எல்லாம் என்னை விட்டு பறந்து விட்டது.
தெலுங்கில் ”லோபர்” படத்துடன் எனது கெரியர் ஆரம்பமானது. ”குங்ஃபூ யோகாவில்” ஜாக்கிஜான் உடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். நான் நடிக்கும் படத்தின் வெற்றி, தோல்விகளை பற்றி யோசிக்க மாட்டேன். தோல்விகள் என்னை பாதிக்காது. என்னுடைய பழைய வாழ்க்கையும், இப்போது உள்ள வாழ்க்கையும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருப்பேன். இந்த கணத்தில் வாழ்கிறேன். இந்த நிமிஷத்தை ஆனந்தமாக அனுபவிக்கிறேன். ஏதாவது சினிமாவில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரத்தில் முழுமையாக இணைந்து வாழ்ந்து விடுவேன். இயக்குனர், ஹீரோ, கோரியோகிராபர் ஒவ்வொருயிடமிருந்தும் ஏதோ கொஞ்சம் கற்றுக் கொள்கிறேன்.

சினிமாவுக்கு வெளியில் கிடைக்கும் ஆனந்தத்தை விட இவர்களோடு நடிக்கும் போது கிடைக்கும் ஆனந்தமான அனுபவம் எனக்கு விலைமதிக்க முடியாதது. வாழ்க்கை மிகவும் சிறியது உனக்கு நீ நேர்மையாக இல்லாவிட்டால் நிறைய இழந்து விடுவாய் என்பதுதான் எனது வாழ்க்கையின் விதிமுறை. எனக்கு திருமணம் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயம் நடக்கும். இப்போது அந்த எண்ணங்கள் எதுவும் இல்லை. ஒருவருக்கு மனைவியாவது என்பது எனது வாழ்க்கையில் பாதி தான், எனக்கென்று கனவுகள் இருக்கும், சாதிக்க வேண்டிய லட்சியங்கள் இருக்கும். அவையெல்லாம் என் வாழ்க்கையில் மற்றொரு பாதி”.