“எங்களுக்கு எங்க ஊரிலேயே டாஸ்மாக் கடை வேணும் இல்லன்னா செத்துருவோம். எங்க ஊரிலேயே குடிச்சிட்டு படுத்துட்டன்னா பொண்டாட்டி, புள்ளைங்க வந்து தூக்கிட்டு போய்டுவாங்க.வெளியூர்ன்னா சிரமமா இருக்கும்”. ஆற்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடை வேண்டும் என கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த மது பிரியர்கள்.
விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் கிராமத்தை அடுத்து உள்ள கிராமம் ஆற்காடு. இந்த கிராமத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.இந்த கிராமத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயத்தொழிலை தான் நம்பி இருக்கிறார்கள்,மேலும் சிலர் வெளியூருக்கு வேலைக்கு செல்வது வழக்கம்.இந்த கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை இல்லை.இந்த ஊரில் மதுபான கடை கூடாது என அந்த கிராம பெண்கள் கூறி வந்த நிலையில்,இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை இல்லை என கூறி கிராம மதுப்பிரியர்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ஆற்காடு கிராமத்தில் டாஸ்மாக் வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தனர்.

அப்போது பேசிய மது பிரியர்கள் “நாலு பொம்பளைங்க சொல்றாங்கன்னு கடையை கொண்டு வர மாட்டார்கள்.இது சரியில்ல நாங்க எங்கன்னா வேலை செஞ்சிட்டு வர எங்களுக்கு உடம்பு வலிக்கு ஒரு கடை வேணும்.இல்லன்னா நாங்க ஏழு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ஆயந்தூர் டாஸ்மாக் கடைக்கு தான் போகணும். அங்க சிலர் எங்களை வழிமறித்து அடிக்கிறாங்க. அதனால எங்க ஊரிலேயே டாஸ்மாக் கடை வேணும்.
7 கிலோமீட்டர் போக முடியலன்னா உள்ளூரிலேயே சரக்கு பிளாக்ல விக்கிறாங்க 200 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டியதா இருக்கு. நாங்க ஒரு நாளைக்கு 400 ரூபாய் சம்பாதிக்கிறோம். இரண்டு பாட்டில் வாங்கிட்டா குடும்பத்துக்கு எப்படி காசு குடுக்க முடியும். அதுவும் இல்லாம வெளியூர்ல போய் குடிச்சிட்டு படுத்துட்டா யாருக்கும் தெரியாது. உள் ஊர்லனா பிள்ளைங்க பொண்டாட்டி வந்து தூக்கிட்டு போவாங்க. எங்க நிலைமை புரிஞ்சிக்கின்னு எங்க ஊரிலேயே டாஸ்மாக் கடை அமைக்கவும்” அப்படின்னு கலெக்டர் கிட்ட மனு கொடுத்திருக்கிறோம் என்றார்கள்.

மதுபானக்கடை வேண்டாம் என்கிற போராட்டங்கள் ஒரு பக்கம் நடக்கிற இந்த வேளையில் டாஸ்மாக் மதுபானக் கடை வேண்டும் என்கிற கோரிக்கை வினோதமாக உள்ளது.மதுக்கடை திறந்தால் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியாது,ஆண்கள் வேலைக்கு போகமாட்டார்கள் டாஸ்மாக்கே கதியென ஆண்கள் கிடப்பார்கள் இதனால் குடும்பங்கள் சீரழிந்து விடும் எனவே அரசு மதுபானக்கடையை திறக்கக்கூடாது என்கிறார்கள் அந்த கிராமத்தின் பெண்கள்.