மது அருந்த தண்ணீர் கொண்டு வர மறுத்த நபரை கால்களால் மிதித்து சாவடித்த குற்ற பின்னணி நபருக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது .
சென்னை ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் சங்கர்,43. இவர், கடந்த 2021 அக்.3 ம் தேதி அவர் வீட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர்.நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே படுத்து துாங்கி இருந்துள்ளார் ..
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரவுடி செல்வக்குமார் என்ற மஞ்சா செல்வக்குமார் வயது ,34 மற்றும் அவருடன் வந்த நண்பர்கள் சிலர் , சங்கர் ஓய்வெடுத்து கொண்டிருந்த பஸ் நிலையம் அருகாமையில் மது அருந்த முடிவு செய்து அங்கே சென்றுள்ளனர்.
அவர்கள் வைத்திருந்த மது குடிப்பதற்கு அவர்களிடம் தண்ணீர் இல்லாததால் அங்கு துாங்கி கொண்டிருந்த சங்கரை, செல்வகுமார் எழுப்பி, மது குடிக்க அருகில் இருந்த குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வரும்படி கூறியுள்ளார். அதற்கு சங்கர் மறுத்துள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில், சங்கரின் முகத்தில் கால்களால் மிதித்து தரையில் அமுக்கி, செல்வகுமார் கொலை செய்துள்ளார். இதுகுறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவுடி செல்வக்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை ஆனது , சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள 16 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தது .
நேற்று இந்த வழக்கு நீதிபதி எல்.அபிரகாம் லிங்கன் முன் விசாரணைக்கு வந்தது . போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.மகாராஜன் ஆஜரானார் . வழக்கை விசாரித்த நீதிபதி, செல்வகுமார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என கூறி, அவருக்கு ஆயுள் தண்டனையும், 5,000 ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.