மல்யுத்த_வீராங்கனைகளுக்காகப்_பேசுவோம்! பேராசிரியர் செயராமன்

2 Min Read
வீராங்கனைகள்

இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்கள் மல்யுத்த வீராங்கனைகள். அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறார் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண்சிங் (பாஜக எம் பி.).
பாதிப்புக்குள்ளான மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் நீதி கேட்டு போராடி வருகிறார்கள். இன்றுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

- Advertisement -
Ad imageAd image

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து, கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த 38 நாட்களாக புதுடில்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், சங்கீதா போகத் உட்பட பங்கேற்றனர்.

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை தடுக்க கூடாரங்களை பிரித்தெறிந்தது இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை .மே 28 அன்று நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நீதி கேட்டு பேரணியாக புறப்பட்ட வீராங்கனைகளை காவல்துறை  தடுத்து நிறுத்தி விரட்டியது.

பிரிஜ் பூஷன் மீதான பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக நடத்திய தொடர் போராட்டத்திற்கு எந்த தீர்வும் கிடைக்காத நிலையில், தங்களின் பதக்கங்களை கங்கை நதியில் வீசி எறிய தயாரானார்கள். வியர்வை சிந்தி சர்வதேச போட்டிகளில் வென்ற பதக்கங்களை ஹரிதுவாரில் கங்கை ஆற்றில் விட்டெரியும் நிலையில் வீராங்கனைகள் கண்ணீர் விட்டு கதறினார்கள். மல்யுத்த வீராங்கனைகளை விவசாய சங்கத்தின் தலைவர் நரேஷ் திகேத் தலைமையில் விவசாயிகள் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். மல்யுத்த வீர்ர்களின் பதக்கங்களைப் பெற்றுக்கொண்டு 5 நாட்களில் தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ளளர். இதனால் தற்காலிகமாக மல்யுத்த வீரர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

“போக்சோ” சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் பிரிஜ் சரண் சிங் இன்று வரை கைது செய்யப்படவில்லை. அதிகப்பட்சம் அந்த பதவியிலிருந்து  விலகிக் கொள்ளுமாறு கூறி, இந்திய ஒன்றிய அரசு நிலைமையை சமாளித்துக் கொள்ள, நரித்தனம் செய்கிறது.

இவர்களுக்கு ஒரு பார்வை உண்டு. பெண்கள் யாராக இருந்தாலும் அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள தங்களுக்கு உரிமை இருப்பதாகக்  கருதுகிறார்கள். சிறுபான்மை சமயத்தைச் சேர்ந்த பெண்கள் என்றால் பாலியல் வன்கொடுமையைக் கடமையாகக் கருதுகிறார்கள். V.D.சாவர்க்கர் எழுதியுள்ள The Six Great Epochs பாருங்கள். இவர்கள் கருத்தியல் ரீதியாகவே பாலியல் குற்றச் சார்பான மனநிலையை கொண்டவர்கள். இவர்களிடம் நீதி பெறுவது கடினம்.

சாமானிய மக்களும், பல்வேறு சமூக அமைப்புகளும் ஒருங்கு திரண்டு வீராங்கனைகளின் பக்கம் பேச வேண்டிய தேவை எழுந்துள்ளது.

பாலியல் குற்றவாளி பிரிஜ் பூஷன் சரண்சிங் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்!

Share This Article
Leave a review