சென்னை, இளைஞர் அணியின் பெருமையை நாடே உணரும் வகையில் சேலம் மாநாட்டை நடத்திக் காட்டுவோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் டிசம்பர் மாதம் 17ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக திமுக தலைமை கழகத்தால் 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களின் செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

இதில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது: திமுக இளைஞர் அணியின் மாநில மாநாடு 16 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள இளைஞரணி மாநாடு நம் இளைஞர்களின் பெருமையை திமுகவின் கட்டமைப்பை இந்திய ஒன்றிய உணர்ந்து கொள்ளும் வகையில் நடைபெற இருக்கிறது.
லட்சக்கணக்கான இளைஞர்கள் கூடும் நம் இளைஞர் அணி மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எந்த அளவுக்கு நேர்த்தியாக திட்டமிடப்பட வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். மாநாட்டுக்கான பணிகளை நாம் அனைவரும் இணைந்து தான் செய்யப் போகிறோம். இந்த மாநாட்டை நடத்துவதற்கு நமக்கு மிகப்பெரிய பலமாக முதன்மை செயலாளர் நேரு உள்ளார். பல மாநாட்டை நடத்திய அனுபவம் அவருக்கு உள்ளது. இதில் நாம் என்ன தவறு செய்வோம் என பலர் காத்திருக்கிறார்கள்.

அதனால் விமர்சனத்துக்கு இடம் அளிக்காமல் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்ட வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தலைமை கழகமே மாநில மாநாட்டையோ மண்டல மாநாட்டையோ நடத்துவது வழக்கம். ஆனால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக மாநாட்டை நடத்தும் மிகப்பெரிய வாய்ப்பை பொறுப்பை நம் தலைவர் மு க ஸ்டாலின் இளைஞர் அணிக்கு வழங்கி உள்ளார். தலைவர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நம் செயலின் மூலம் நிரூபிக்க வேண்டியது நம் கடமை என்று கூறியுள்ளார்.