தலையங்கம்….
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட இருக்கின்றன. ஒரு பக்கம் பள்ளி நிர்வாகம் கட்டிடங்கள், பள்ளி வளாகங்கள், மாணவர்கள் சென்றுவரும் வாகனங்கள் என எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி இருக்கும். இருக்க வேண்டும்.
அரசு பள்ளிகள் மாணவர்களை எப்படியாவது தேர்ச்சி பெற வைத்து விட வேண்டும் என்கிற நோக்கத்தோடு ஆசிரியர்களை முடுக்கிவிடும். தனியார் பள்ளிகளோ மாணவர்களை அதிக மதிப்பெண் எடுத்து தரவரிசை பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு ஒரு பக்கம் மாணவர்களை கசக்கி பிழிந்து தரத்தை உயர்த்தி காட்ட முன் வரும்.
இரண்டு பள்ளிகளிலுமே மாணவர்களை தயார் ஆக்குகிற பணியை செய்பவர்கள் ஆசிரியர்கள் தான். அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்தி பணியாற்றுவது உண்டு. காரணம் நிர்வாகம். அரசு பள்ளிகளில் அப்படி நிர்வாகம் இருப்பதில்லையா? இருக்கும் அவை அலுவலர்கள் தங்களை கேள்வி கேட்காத வரை சீராக இயங்கும். அப்படி கேள்வி கேட்கும் நிலையில் ஆசிரியர்களை முடுக்கிவிட பார்க்கும்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களில் சில ஆசிரியர்களின் மெத்தனப்போக்கு காரணம் தான் மாணவர்களை சரியாக உருவாக்குவதில் தவறிழைக்கிறது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அறிவு கூர்மை உள்ளவர்களாக வளர வேண்டும் என்று எண்ணுவதை விட, அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று என்பவர்களே அதிகம். மதிப்பெண் ஒரு மாணவனை அறிவாளியாக்குகிறதா? என்றால் இல்லை.
அதை புரிந்து கொள்ளக்கூடிய பெற்றோர்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய சதவீதம் தான். ஆடம்பரம் கவர்ச்சி கௌரவம் என்கிற பெயரில் பிள்ளைகளை வஞ்சிக்கிறார்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களும்.
அரசும் கூட தேர்ச்சி விகிதத்தை தான் பார்க்கிறது தவிர மாணவர்களின் அறிவை பார்ப்பதில்லை. ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒரு விதமான தனித்திறமை இருக்கும் அதனை அறிந்து அதை ஊக்குவித்து அவர்களை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் செயல்பட வேண்டும்.
அரசும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மாணவர்களை மதிப்பெண்ணை வைத்து மதிப்பட வேண்டாம். அவர்கள் அறிவு கூர்மையானவர்கள் அவர்களின் திறமைகளை வைத்து மதிப்பிடுங்கள். மாணவர்கள் படிக்கிற நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கைக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
ஜோதி நரசிம்மன்
ஆசிரியர்