மறைந்த நடிகரும் , துக்ளக் இதழின் நிறுவனரும் , அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி அவர்களின் மனைவி சவுந்தரா ராமசாமி வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பல்வேறு படங்களில் அரசியல் வசனங்கள் பேசி மக்களின் கவனத்தை பெற்றவர் சோ .
துக்ளக் என்ற பத்திரிகை நடத்தி வந்த சோவுக்கு சௌந்தரா என்ற மனைவியும், ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துஜா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு சோ ராமசாமி உடல் நலக்குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து, சோ ராமசாமியின் மனைவி, சௌந்தரா சோ ராமசாமி வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

இவரது உடல் நாளை காலை நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாமக கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் : துக்ளக் இதழின் நிறுவனரும், அரசியல் விமர்சகருமான நண்பர் மறைந்த சோ இராமசாமி அவர்களின் மனைவி சவுந்தரா இராமசாமி காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வரும் , அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் : பிரபல பத்திரிகையாளர், வழக்கறிஞர், திரைப்பட நடிகர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவரும், துக்ளக் இதழின் முன்னாள் ஆசிரியருமான மறைந்த திரு. சோ ராமசாமி அவர்களின் மனைவி திருமதி சவுந்திரா ராமசாமி அவர்கள் வயது முதிர்வு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
அன்னாரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அ ம மு க நிறுவனப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் : துக்ளக் இதழின் நிறுவனரும், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான மறைந்த திரு. சோ இராமசாமி அவர்களின் மனைவி திருமதி. சவுந்திரா ராமசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
திருமதி.சவுந்திரா ராமசாமி அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா : பிரபல அரசியல் விமர்சகரும், துக்ளக் இதழ் ஆசிரியருமான மறைந்த சோ ராமசாமி அவர்களின் மனைவி சௌந்தரா ராமசாமி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

மறைந்த சோ ராமசாமி அவர்களும் அவரது மனைவி சௌந்தரா ராமசாமி அவர்களும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த அன்பையும், மதிப்பையும் கொண்டிருந்தனர். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது 60ஆம் ஆண்டு பிறந்தநாளின் போது மறைந்த சோ ராமசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களிடம் ஆசிபெற்றதையும் இந்நேரத்தில் எண்ணிப்பார்க்கிறேன்.
அம்மையார் சௌந்தரா ராமசாமி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன். என்று அவர்களது இரங்கல் அஞ்சலியை செலுத்தியுள்ளனர் .