காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்றவரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த கக்கன் குறித்த வாழ்க்கை வரலாறு திரைப்படத்தின் முன்னோட்டத்தையும், பாடல்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். இதற்கான விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது. பொது வாழ்வில் எளிமையையும், நேர்மையையும் தனது வாழ்நாளின் கடைசி மூச்சு வரை கடைபிடித்த அரசியல் தலைவர் கக்கன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கக்கன். மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் நேரு ஆட்சி காலத்தில் 1952 முதல் 1957 வரை எம்.பி.யாக இருந்தார் கக்கன். கக்கன் தமிழ்நாட்டில் காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் போன கக்கனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபு மாணிக்கம் என்பவர் இயக்கி வருகிறார். சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் “கக்கன்” திரைப்படத்தை தயாரித்துள்ளது. தேவா இசை அமைக்கும் இந்த படத்திற்கு வெங்கி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. கக்கன் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியிலும் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ‘கக்கன்’ படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் டிரெய்லர் மற்றும் பாடல்களை வெளியிட்டார். இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் நிர்வாகிகள் ஈவிகேஸ் இளங்கோவன், கோபண்ணா, ஹசன் மௌலானா, அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், தியாகி கக்கனின் மகள் கஸ்தூரி பாய், சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் எஸ்.ராஜேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.