ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி வரை சென்றுகொண்டிருந்த முன்பதிவில்லா பயணிகள் விரைவு ரயில் செங்கோட்டைவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதலாவது ரயிலை மத்திய தகவல் ஒலிபரப்பு, பால்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் நேற்று ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 2047-க்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது என்றும் நவீன் சக்தி என்ற திட்டத்தின் கீழ் உள் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்குப் பிரதமர் அதிக கவனம் செலுத்துகிறார் என்றும் கூறினார். மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் பணிக்கு சுமார் 70% நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் எலிவேட்டர் காரிடர் எனப்படும் மேம்பால வழித்தடங்களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதையும் பிரதமர் அதில் கலந்து கொண்டதையும் மக்கள் வரவேற்கின்றனர்; மகிழ்ச்சியடைகின்றனர். மக்களின் 500 ஆண்டுகால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் எல். முருகன் தெரிவித்தார்.

இந்திய அளவில் மீன் வளத்துறை உட்பட பல்வேறு துறைகளில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று கூறிய அமைச்சர், ரூ. 600 கோடி செலவில் சந்திரயான் மூலம் சந்திரனின் தென்துருவத்தை நாம் அடைந்துள்ளோம் இது எந்த நாடும் செய்யாத சாதனை என்றார்.
மேலும் நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை வாகனங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் நகர்புறங்களையும் சென்றடைந்து மத்திய அரசின் நலத்திட்டங்களை விளக்குவதுடன், புதிய பயனாளிகளை திட்டங்களில் இணைக்கும் பணியும் மேற்கொள்ளப்படுகிறது என்றும் தெரிவித்தார். மேலும் வங்கிகள் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன, பிரதமரின் உஜ்வாலா திட்த்தின் மூலம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளும் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார். இந்த லட்சிய பயண யாத்திரை நாட்டின் கடைகோடியிலிருக்கும் கடைசி நபருக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதிசெய்யும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.