மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 3 நாள் பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று (20.06.2023) அதிகாலை புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 9 மணியளவில் போர்ட்பிளேர் செல்வார். இதைத் தொடர்ந்து டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி-யின் நினைவுத் தினத்தையொட்டி போர்ட்பிளேரில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் மலரஞ்சலி செலுத்துவார்.
பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளைப் பார்வையிடும் அவர், பொதுமக்கள் மற்றும் அரசு நலத்திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடுவார்.
ஜூன் 21, காலை அந்தமான் நிக்கோபர் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச யோகா தினம் 2023-ல் அமைச்சர் டாக்டர் எல். முருகன் பங்கேற்பார். இதன் பின்னர் போர்ட்பிளேர் நகரில் வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோரின் கூட்டத்தில் கலந்துகொள்வார். அன்று மாலை ஸ்வராஜ் தீவுப் பகுதியில் மீன் இறங்கும் மையத்தைப் பார்வையிடும் அமைச்சர் பின்னர் மீனவர்களுடன் கலந்துரையாடுவார். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அரசு நலத்திட்டப் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடுவார்.
3-ம் கட்ட பயணத்தின் போது, போர்ட்பிளேரில் உள்ளூர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமைச்சர் எல். முருகன் காலை 11 மணிக்கு ஹோட்டல் லெமன் ட்ரீ-யில் செய்தியாளர்களை சந்திப்பார். பின்னர் வீர சவார்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் கட்டுமான மற்றும் மேம்பாட்டு பணிகளை அவர் பார்வையிடுவார். இதைத் தொடர்ந்து மாலை 5 மணியளவில் கிரங்கா பூங்காவில் உள்ளூர் நிகழ்ச்சிகளில் அமைச்சர் டாக்டர் எல். முருகன் பங்கேற்பார்.